1,000 மெட்ரிக் பள்ளிகளுக்கு விதிமுறைகள் தளர்வு : நிபுணர் குழு அறிக்கையில் பரிந்துரை :சென்னையில் 75 பள்ளிகளுக்கு சிக்கல்? - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2019| HEALTH TIPS |TNTET 2019:

Breaking News

Post Top Ad

Thursday, 26 December 2013

1,000 மெட்ரிக் பள்ளிகளுக்கு விதிமுறைகள் தளர்வு : நிபுணர் குழு அறிக்கையில் பரிந்துரை :சென்னையில் 75 பள்ளிகளுக்கு சிக்கல்?

உரிய இடவசதி இல்லாத, 1,000 மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு, விதிமுறைகளை தளர்த்தி, தொடர்ந்து இயங்க, நடவடிக்கை எடுக்கலாம்' என, தமிழக அரசிற்கு சமர்ப்பிக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கையில், பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எனினும், சென்னையில், 75 பள்ளிகளுக்கு சிக்கல் ஏற்படும் என கூறப்படுகிறது.முந்தைய அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், தனியார் பள்ளிகளுக்கு, குறைந்தபட்ச இடவசதி குறித்து, வரையறை செய்யப்பட்டது. கிராமமாக இருந்தால், மூன்று ஏக்கர்; நகர பஞ்சாயத்து எனில், ஒரு ஏக்கர்; நகராட்சி பகுதியாக இருந்தால், 10 கிரவுண்டு; மாவட்ட தலைநகரில், எட்டு கிரவுண்டு; மாநகராட்சி பகுதி எனில், ஆறு கிரவுண்டு இடம் இருக்க வேண்டும் என, அரசு தெரிவித்துள்ளது.'இந்த விதிமுறை, புதிய பள்ளிகள் துவங்குபவர்களுக்கு மட்டும் என்றில்லாமல், ஏற்கனவே இயங்கும் பள்ளிகளுக்கும் பொருந்தும்' என, தெரிவிக்கப்பட்டது. இதனால், 10 ஆண்டு, 20 ஆண்டுகளுக்கு முன் அங்கீகாரம் பெற்று, குறைந்த இட வசதியில் இயங்கிவரும், 1,000 மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு சிக்கல் ஏற்பட்டது.

இதுகுறித்து ஆய்வு செய்ய, பள்ளி கல்வி இயக்குனர் தலைமையில், நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இக்குழு, மாநிலம் முழுவதும், பலதரப்பினரிடம் கருத்துகளை கேட்டறிந்தது.நிபுணர் குழுவின் பரிந்துரை அறிக்கை, சில தினங்களுக்கு முன், தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டதாக, தனியார் கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்க பொதுச்செயலர், நந்தகுமார் கூறியதாவது:'பழைய பள்ளிகளுக்கு, விதிமுறைகளை தளர்த்தி, தொடர்ந்து இயங்க,வழிவகை செய்யலாம்' என, பரிந்துரை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, தகவல்கள் வந்துள்ளன. அதன்படி, கிராமப்புற பகுதியில், ஒரு ஏக்கர்; நகர பஞ்சாயத்தில், 10 கிரவுண்டு; நகராட்சி பகுதியில், ஐந்து கிரவுண்டு; மாவட்ட தலைநகரில், நான்கு கிரவுண்டு; மாநகராட்சி பகுதியில், மூன்றுகிரவுண்டு என்ற அடிப்படையில் கணக்கிட்டு, பழைய பள்ளிகள், தொடர்ந்து இயங்க வகை செய்யலாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி பார்த்தால், சென்னையில் உள்ள, 75 பள்ளிகளுக்கு மட்டும் பாதிப்பு ஏற்படும். இந்த பள்ளிகளிடம் இடவசதி, ஒரு கிரவுண்டுக்கும் குறைவாக உள்ளது. எனவே, இந்த பள்ளிகள், நர்சரி, பிரைமரி பள்ளிகளாக தரம் குறைக்கப்பட்டு, தொடர்ந்து இயங்கும். நிபுணர் குழு அறிக்கையை, நாங்கள், முழு மனதுடன் ஏற்கிறோம்.இவ்வாறு, நந்தகுமார் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad