ஊரகப் பகுதிகளில் உள்ள,
அங்கன்வாடி மையங்களில், ஊட்டச்சத்து, முன்பருவ கல்வி, சுகாதார கல்வி, நோய்
தடுப்பு, உடல் நல பரிசோதனை, போன்றவை, பொது சுகாதார துறைகளுடன்
ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படுகின்றன.
இப்பயிற்சிக்கு, மேலும் வலுவூட்ட, ஆறு மாதம் முதல், ஆறு ஆண்டு வரையுள்ள
குழந்தைகள், கருவுற்றிருக்கும் பெண்கள், பாலுாட்டும் தாய்மார்கள், வளர்
இளம் பெண்கள் ஆகியோருக்கு, சுகாதாரமான சூழ்நிலையை அளிக்கும் வகையில், 3,000
அங்கன்வாடி மைய கட்டடங்கள் 195 கோடி ரூபாயில் கட்டப்படும் என, முதல்வர்
ஜெயலலிதா சட்டசபையில், 110வது விதியின் கீழ், கடந்த மாதம் 8ம் தேதி
அறிவித்தார்.
அதன்படி, ஒரு அங்கன்வாடி மையம் கட்ட, 6.50 லட்சம் ரூபாய் செலவாகும்.
கூலியாக 47 ஆயிரம் ரூபாய் செலவாகும். 3,000 அங்கன்வாடி மையங்கள் கட்ட 8.52
லட்சம், நபருக்குரிய சம்பளம் தேவைப்படும். எனவே, அங்கன்வாடி மையங்களை,
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கட்டலாம் என, ஊரக
வளர்ச்சி துறை கமிஷனர், அரசுக்கு பரிந்துரை செய்தார்.
அதை ஏற்று, அரசு மாவட்ட அளவில், பொருட்கள் வாங்க 60 சதவீதம்,
ஊதியத்திற்கு 40 சதவீதம் என்ற விகிதத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை
உறுதி திட்டத்தின் கீழ் 3,000 அங்கன்வாடி மையங்கள் கட்ட அனுமதி வழங்க,
அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.