அரசு பள்ளிகளைச்
சேர்ந்த 9ம் வகுப்பு மாணவர்கள் 35 ஆயிரம் பேருக்கு அறிவியல், கணிதம்
குறித்த அடிப்படை பயிற்சி வழங்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில்,
அரசு பள்ளிகளில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு,பெரும்பாலான
பள்ளிகளில் அரசு பொதுத்தேர்வுக்கு தயாராகும் நோக்கில், 10ம் வகுப்பு பாட
புத்தகங்களில் இருந்தே பாட வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. இதை தவிர்க்கும்
வகையில், 9ம் வகுப்பு பாடபுத்தகங்களில் முக்கியமாக அறிவியல், கணிதம் போன்ற
பாடங்களில் அடிப்படை அறிவை மாணவர்களுக்கு வழங்க கல்வித்துறை
உத்தரவிட்டுள்ளது.
பயிற்சி:
இப்பயிற்சி வகுப்பு, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன பேராசிரியர்கள்
மூலம், பாட ஆசிரியர்களுக்கு எடுக்கப்படும். அந்த பாட ஆசிரியர்கள் அந்தந்த
பள்ளி மாணவர்களுக்கு அறிவியல், கணித பாடத்தில் அடிப்படை வாசிப்பு திறன்,
முக்கிய சூத்திரங்கள், கண்டுபிடிப்புகள் சார்ந்த கல்வியை கற்றுத்தர
வேண்டும். இப்பயிற்சி அக்.,முதல் வாரத்தில் துவங்க உள்ளது. முதற்கட்டமாக,
மாநில அளவில் அரசு பள்ளிகளில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவர்களில், 35
ஆயிரம் பேருக்கு வழங்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அனைவருக்கும்
இடைநிலைக்கல்வி திட்ட அதிகாரி கூறுகையில், “ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தில்,
9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அறிவியல், கணித பாடத்தில் சிறப்பு
பயிற்சி அளிக்கப்படும். இதற்காக, மாவட்ட அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன
பேராசிரியர்கள் பயன்படுத்தப்பட உள்ளனர். இதை தொடர்ந்து, பிளஸ் ௧, பிளஸ் 2
முதுகலை ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது,” என்றார்.