நாடு முழுவதும் உள்ள
பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான கூட்டு நுழைவுத்தேர்வை மத்திய
இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்துகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த
தேர்வில், ஆந்திர மாணவர்கள்தான் அதிகளவில் பங்கேற்கின்றனர். இந்த ஆண்டும்
அது நிகழ்ந்துள்ளது. அடுத்தபடியாக உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான்,
மகாராஷ்டிரா, பீகார் ஆகிய மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் கூட்டு
நுழைவுத்தேர்வை எழுதி, சிறப்பான மேற்கல்விக்கு அடிகோலியுள்ளனர்.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 தேர்வுகளில் ஆண்டுக்கு
ஆண்டு தேர்ச்சி சதவீதம் அதிகரித்து வருவதாக அரசு புள்ளிவிவர கணக்கை
வெளியிடுகிறது. இந்த ஆண்டு 8 லட்சம் மாணவர்கள் ப்ளஸ் 2 தேர்வில் வெற்றி
பெற்றதாக அரசு தெரிவித்துள்ளது. ஆனால், இதுபோன்ற புள்ளிவிவரத்தை வைத்துக்
கொண்டு என்ன செய்வது என்றுதான் தெரியவில்லை. காரணம், தமிழகத்தில் இருந்து
கூட்டு நுழைவுத்தேர்வில் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக
உள்ளது. அதையும் கூட சகித்து கொள்ள முடியும். ஆனால், அதில் தேர்ச்சி
பெறுபவர்களின் எண்ணிக்கை அதை விட மோசமாக உள்ளது. தேர்ச்சி
புள்ளிவிவரத்துக்கும், நுழைவுத்தேர்வு தேர்ச்சி விகிதத்துக்கும் உள்ள
முரண்பாட்டை பார்த்தால் தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் லட்சணம்
தெரியும்.
கல்வியில்
பின்தங்கிய மாநிலமாக நம்மால் கூறப்படும் பீகார் கூட, இந்த விஷயத்தில்
சாதனையை செய்யாவிட்டாலும் கூட, குறிப்பிடத்தக்க தேர்ச்சி பதிவை
நிலைநிறுத்தி உள்ளது.
கல்விக்காக பெருமளவு
நிதியை ஒதுக்கியுள்ளதாகவும், திட்டங்களை வகுத்துள்ளதாகவும் கூறிக் கொண்டே
இருப்பதற்கு பதில், முதலில் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கான
நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியது மிக அவசியமாகிறது. இல்லாவிட்டால்,
தேர்ச்சி சதவீதம்தான் அதிகரிக்குமே தவிர மாணவர்களிடம் திறன் என்பதை
எதிர்பார்க்க முடியாமல், மற்ற மாநில மாணவர்கள் அனைத்து துறைகளிலும்
நமக்கு முன் நிற்பார்கள். கல்வி என்பது ஒரு காலத்தில் சரஸ்வதியாக
கருதப்பட்டு, அதற்குரிய முழு மரியாதை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், இன்று
கல்வி நிறுவனங்கள் காசு கொழிக்கும் தொழிலாக மாறிவிட்டது. இப்படிப்பட்ட
நிலையில், கல்வியின் தரத்தை உயர்த்த அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.