"புரிதலுடன் கூடிய
கல்வி அறிவை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும்," என தொடக்க
கல்வி இயக்குனர் இளங்கோவன் வலியுறுத்தினார். மதுரையில்
நடுநிலைப்பள்ளி தலைமை யாசிரியர்களுக்கான கற்றல் அடைவுதிறன் மேம்படுத்துதல்
பயிற்சி முகாமை நேற்று துவக்கி வைத்து அவர் பேசியதாவது-மாணவர்களுக்கு எளிய முறையில் எழுத்தறிவை வளர்க்கும்
வகையில் கற்பித்தல் பயிற்சி அளிக்க வேண்டும். ஒவ்வொரு புதிய வார்த்தைகளை
கற்பிக்கும் போது, அதன் அர்த்தத்தை மாணவர்கள் மனதில் பதியும் வகையில்
விளக்க வேண்டும். வரலாற்று சம்பவங்களை, தற்போது நடைமுறையில் உள்ள சில
நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு கற்பித்தல் முறையை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டும்.
'புரிதல் இல்லாத அறிவு என்பது வீண்' என்று ஆசிரியர்கள் புரிந்துகொண்டு
அதற்கேற்ப கற்பித்தல் பணியை மேற்கொள்ள வேண்டும், என்றார்.
முதன்மை கல்வி
அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி, தொடக்க கல்வி அலுவலர் சுப்பிரமணியன், உதவி
தொடக்க கல்வி அலுவலர்கள் பாலகிருஷ்ணன் (டி.கல்லுப்பட்டி), விஜயராஜன்
(நர்சரி பள்ளிகள்), மோசஸ் பெஞ்சமின் (மதுரை வடக்கு) உட்பட பலர்
கலந்துகொண்டனர். 15 கல்வி வட்டாரங்களில் இருந்து வாசிப்பு மற்றும் எழுதும்
திறனில் மிகவும் பின்தங்கிய தலா ஐந்து பள்ளிகள் வீதம் 75 தலைமையாசிரியர்கள்
பங்கேற்றனர்