இலவச கட்டாய கல்விச் சட்டத்தின்கீழ் சேர்க்கப்பட்டுள்ள ஏழைக்
குழந்தைகளுக்கான ரூ.97 கோடி செலவுத்தொகையை தனியார் பள்ளிகளுக்கு கொடுக்கும்
வகையில் அதை மத்திய அரசு உடனே வழங்கவேண்டும் என்று பிரதமருக்கு,
முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் விதிமுறைகள் வெளியீடு
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:–
மத்திய
அரசு கொண்டுவந்த, குழந்தைகளுக்கான கட்டாய இலவச கல்விச் சட்டம் 1.4.10
அன்று அமலுக்கு வந்தது. 6 முதல் 14 வயதுள்ள குழந்தைகளுக்கு வீட்டருகில்
உள்ள பள்ளிக்கூடங்களில் இலவசமாக கல்வியை கட்டாயமாக அளிக்கவேண்டும்
என்பதுதான் இந்த சட்டத்தின் நோக்கம்.
இந்த சட்டத்தை
அமல்படுத்தக்கூடிய விதிமுறைகள் அனைத்தும் 8.4.10 அன்று அறிவிக்கையாக மத்திய
அரசால் வெளியிடப்பட்டன. தமிழகத்தில் அந்த விதிமுறைகளை ஜெயலலிதா 8.11.11
அன்று அறிவிப்பாணையாக வெளியிட்டார்.
25 சதவீதம் ஏழைக் குழந்தைகள்
அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளும் இந்த சட்டத்துக்கு உட்பட்டவை.
முதலாம் வகுப்புக்கு முந்தைய வகுப்பில் இருந்து குழந்தைகளைச் சேர்க்கலாம்.
வறுமையில் வாடும் குடும்பங்கள், சமுதாயத்தில் பின்தங்கிய குடும்பங்கள்
போன்றவற்றைச் சேர்ந்த குழந்தைகளை இந்தச் சட்டத்தின்படி பள்ளிகளில் சேர்க்க
வேண்டும்.
அந்த வகையில், ஒரு வகுப்பில் சேர்க்கப்பட வேண்டிய
குழந்தைகளின் எண்ணிக்கையில் 25 சதவீதம் பேர் ஏழைக் குழந்தைகளாக
இருக்கவேண்டும். இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு ஆகும் செலவை மாநில அரசிடம்
இருந்து அந்தப் பள்ளிகள் வாங்கிக்கொள்ளலாம்.
இந்த சட்டத்தை
அமல்படுத்துவதில் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பொறுப்பு உண்டு
என்பதையும் அந்தச் சட்டம் கூறுகிறது. மாநில அரசுகளுக்கு ஆகும் செலவை உதவித்
தொகையாக மத்திய அரசு வழங்கவேண்டும்.
செலவான தொகை
அந்த சட்டம் கூறுவதுபடி, தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில்
எப்படிப்பட்ட குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்பதற்கான விளக்கத்தையும்
8.11.11. என்று தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி 2013–14ம் ஆண்டில் 49
ஆயிரத்து 864 குழந்தைகளும், 2014–15ம் ஆண்டில் 86 ஆயிரத்து 729
குழந்தைகளும் தனியார் பள்ளிகளில் முதலாம் வகுப்பிலோ அல்லது அதற்கு முந்தைய
வகுப்பிலோ சேர்க்கப்பட்டனர்.
அந்தக் குழந்தைகளுக்கு ஆகிய செலவை தமிழக
அரசிடம் கேட்டு தனியார் பள்ளிகள் விண்ணப்பித்துள்ளன. அதன்படி 2013–14–ம்
ஆண்டுக்கான செலவுத் தொகையாக ரூ.25.13 கோடியும், 2014–15–ம் ஆண்டுக்கு
ரூ.71.91 கோடியும் வருகின்றன.
திருத்தங்கள்
இதுபற்றி சர்வசிக்ஷா அபியான் என்ற திட்ட இயக்குனர், மத்திய மனிதவள
மேம்பாட்டு துறைக்கு 18.10.13 அன்று கடிதம் எழுதினார். அதில், ரூ.25.13
கோடியை தரும்படி கோரியிருந்தார். ஆனால் அந்த அமைச்சகத்திடம் இருந்து எந்தப்
பதிலும் வரவில்லை.
இந்த நிலையில், அனைத்து மாநில அரசுகளுக்கு மனிதவள
மேம்பாட்டுத் துறை கடிதம் எழுதி, சில திருத்தங்களை கூறியது. 1.4.14
அன்றிலிருந்துதான் செலவுத் தொகையை மாநில அரசுகள் கேட்க முடியும் என்றும்
முதலாம் வகுப்பு முதல் 8–ம் வகுப்பு வரையில் படிக்கும் குழந்தைகளுக்கு
ஆகும் செலவில் அதிகபட்சம் 20 சதவீதம் மட்டுமே தர முடியும் என்றும் அதில்
கூறப்பட்டு இருந்தது.
சட்டத்தை மீறிய செயல்
யாரையும் கேட்காமல் தனிச்சையாக சர்வசிக்ஷா அபியான் திட்டத்தில்
கொண்டுவரப்பட்ட இந்த திருத்தத்தால் 2013–14–ம் ஆண்டில் செலவான ரூ.25.13
கோடியை கேட்டு நாங்கள் வைத்த கோரிக்கை ஏற்கப்படாமலேயே போய்விட்டது.
2014–15–ம் ஆண்டில் செலவான ரூ.71.57 தொகையும், ரூ.14 லட்சமாக
குறைக்கப்பட்டது.
இந்த நடவடிக்கை, முதல் வகுப்புக்கு முந்தைய
வகுப்புகளிலும் (பிரி கேஜி) குழந்தைகளை சேர்க்கலாம் என்ற கட்டாய கல்விச்
சட்டப் பிரிவை மீறிய செயலாகும். முதலாம் வகுப்பில் குழந்தைகளை நேரில்
சேர்ப்பது மிகவும் கடினமாக காரியம் என்பதால், பெரும்பாலானோர் குழந்தைகளை
அதற்கு முந்தைய ‘‘பிரி கேஜி’’ வகுப்புகளில் சேர்த்துவிட்டனர்.
மொத்த பழு
சர்வசிக்ஷா அபியான் திட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள்,
கட்டாய கல்விச் சட்டத்துக்கு முரணாகவும், நியாயமற்றதாகவும் உள்ளன. இந்த
சட்டம் சுட்டிக்காட்டும் ஏழைக் குழந்தைகளை பாதிப்பதாக அது அமைந்துவிடும்.
செலவுத்
தொகையை கொடுக்காவிட்டால் அதுபோன்ற குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் இடம்
கிடைக்காமல் போய்விடும். பிரி கேஜியில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு
ஆகும் செலவு மொத்தத்தையும் தனியார் பள்ளிகளுக்கு கொடுக்க வேண்டிய பழு,
மாநில அரசின் மேல் விழுந்துவிட்டது. இதுவும் அந்த சட்டத்துக்கு முரணானதாக
உள்ளது.
எதிர்காலத்துக்கு ஆபத்து
கட்டாய இலவசக் கல்வித் திட்டத்தை உண்மையாக அமல்படுத்தும் எண்ணம்,
இந்த திருத்தங்களைக் கொண்டு வந்த முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி
அரசுக்கு இருந்ததாகத் தெரியவில்லை. ஏழைக் குழந்தைகள் இலவச கல்வி பெறுவதில்
உள்ள இதுபோன்ற இடையூறுகளை களைவதற்கும், அவர்கள் கல்வி பெறுவதை உறுதி
செய்வதற்கும் உங்களுக்கு தற்போது ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஆனால்
இந்த விஷயத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை தனது மூர்க்கத்தனமான
நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை. இந்த நிலை நீடித்தால், 2013–14 மற்றும்
2014–15ம் ஆண்டுகளில் இந்த சட்டம் மூலம் தனியார் பள்ளிகளில்
சேர்க்கப்பட்டு, தொடர்ந்து படித்து வரும் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு
ஆபத்து வந்துவிடும்.
செலவை உடனே தாருங்கள்
ஆனாலும், தார்மீக பொறுப்பின்படி இந்த 2015–16–ம் ஆண்டிலும் 25 சதவீத
இடஒதுக்கீட்டின்படி தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தமிழக அரசு
தொடர்கிறது. எனவே சட்டத்தில் கூறியுள்ள படி மத்திய மனிதவள மேம்பாட்டுத்
துறை செயல்பட்டு, தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு ஆன செலவு ரூ.97.04
கோடியை உடனே திருப்பித்தரும் வகையில் நீங்கள் தலையிட்டு நடவடிக்கை
எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இலவச கட்டாய கல்விச் சட்டத்துக்கு
ஏற்ற வகையில் சர்வசிக்ஷா அபியான் திட்டத்தில் மாற்றங்களைக்
கொண்டுவருவதற்கு மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு நீங்கள் அறிவுரை
வழங்கவேண்டும். ஏழைக் குழந்தைகளின் படிப்புக்கு இடையூறு கொண்டுவரும்
கூறுகளை நீக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.







