பி.எட். படிப்பில் சேர விண்ணப்பம்
தமிழ்நாடு முழுவதும் அரசு பி.எட். கல்லூரிகள் 7 உள்ளன. அரசு உதவி பெறும் பி.எட். கல்லூரிகள் 14 இருக்கின்றன. இந்த 21 கல்லூரிகளிலும் பி.எட். சேர்ந்து படிக்க 2 ஆயிரம் இடங்கள் உள்ளன. இந்த 2 ஆயிரம் இடங்களில் மாணவ- மாணவிகளை சேர்க்க கலந்தாய்வு முறை கடைப்பிடிக்கப்பட உள்ளது. மாணவர்கள் பட்டப்படிப்பில் எடுத்த மதிப்பெண் மற்றும் அவர்கள் முதுகலை பட்டம் பெற்றிருந்தால் அதற்கு 4 மதிப்பெண், எம்.பில். படித்திருந்தால் 5 மதிப்பெண், பிஎச்.டி. படித்திருந்தால் அதற்கு 6 மதிப்பெண் உண்டு. இந்த மதிப்பெண் அடிப்படையிலும் இட ஒதுக் கீட்டு அடிப்படையிலும் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
11-ந்தேதி கடைசி நாள்
விண்ணப்ப படிவம் 10-ந் தேதி வரை கொடுக்கப்பட உள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை செயலாளர், தமிழ்நாடு பி.எட். சேர்க்கை, லிவிங்ஸ்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், சென்னை-5 என்ற முகவரிக்கு 11-ந் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்பவேண்டும்.
கடந்த ஆண்டு வரைபி.எட். படிப்பின் காலம் ஒரு ஆண்டாக இருந்தது. ஆனால் இந்த வருடம் 2 வருடமாக்கி மத்திய அரசு உத்தரவிட்டது. 2 வருடமாக்கக்கூடாது என்று சில தனியார் பி.எட். கல்லூரிகள் நீதிமன்றத்தை நாடின. இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விண்ணப்பம் கொடுக்கும் பணி நேற்று தொடங்கியது.
பி.எட். படிப்பின் காலம் எத்தனை வருடம் என்று லேடி வெலிங்டன் பி.எட். கல்லூரி அதிகாரி ஒருவர் கூறுகையில் பி.எட். எத்தனை வருடம் என்று இதுவரை முடிவு செய்யப்படவில்லை. நீதிமன்ற வழக்கு முடிந்தால் தான் தெரியும். கலந்தாய்வுக்கு முன்பாக எப்படியும் தெரியும் என்று நினைக்கிறேன் என்றார்.








