இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:
கல்வி வளம் பெற்ற மாணவ சமுதாயத்தை உருவாக்க வேண்டுமென்ற லட்சியத்தோடும், தியாக உணர்வோடும், மன மகிழ்வோடும் ஆசிரியராக தனது பணியைத் தொடங்கி நமது நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்தவர் தத்துவ மேதை டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன்.
தமிழகத்தில் அனைவருக்கும் தரமான கல்வியை அளித்திடும் வகையில், எனது தலைமையிலான அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ. 64,485.97 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதுடன், 1,319 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
மேலும், 182 தொடக்கப் பள்ளிகள், தேசிய சட்டப் பள்ளி, 4 அரசு பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட 53 கல்லூரிகள் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 72,843 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
அறியாமை இருளை நீக்கி, அறிவுக் கண்ணை திறக்கும் மகத்தான மனிதவள மேம்பாட்டுப் பணியை ஆற்றிவரும் ஆசிரியர்களை கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் நல்லாசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சிறப்பாகக் கல்விப் பணி ஆற்றி நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டைத் தெரிவிக்கிறேன். நாட்டின் எதிர்காலத் தூண்களான மாணவர்களுக்கு கல்வியோடு, ஒழுக்கத்தையும், தன்னம்பிக்கையையும், விடாமுயற்சியையும் கற்பித்து, அவர்களை தேசத்தின் விலை மதிப்பில்லாச் செல்வங்களாக உருவாக்கும் உயரிய பணியை ஆற்றிடும் ஆசிரியர்களின் சேவை மேலும் சிறக்க வாழ்த்துகள் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.








