ஜனவரி 1–ந்தேதி அமலுக்கு வருகிறது தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டால்
வாடிக்கையாளருக்கு இழப்பீடு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ‘டிராய்’
உத்தரவு:
பேசிக்கொண்டிருக்கும் போதே தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டால்
வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என தொலைத்தொடர்பு
நிறுவனங்களுக்கு ‘டிராய்’ உத்தரவிட்டு உள்ளது.
இந்த நடைமுறை அடுத்த ஆண்டு ஜனவரி 1–ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
ஏராளமான புகார்
மத்திய அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். மற்றும் ஏராளமான தனியார்
செல்போன் நிறுவனங்கள் நாடு முழுவதும் தொலைத்தொடர்பு வசதிகளை ஏற்படுத்தி
உள்ளன. இந்த நிறுவனங்கள் அனைத்தும் ஏராளமான வாடிக்கையாளர்களை
கொண்டிருக்கின்றன.
சமீபகாலமாக செல்போன்களில் பேசிக்கொண்டிருக்கும்
போதே திடீரென அழைப்பு துண்டிக்கப்படும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன.
இது தொடர்பாக தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்துக்கு (டிராய்) ஏராளமான
புகார்கள் வருகின்றன.
4 மணி நேரத்துக்குள்...
இதைத்தொடர்ந்து தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீது டிராய் அதிரடி
நடவடிக்கை எடுத்து உள்ளது. அதன்படி பேசிக்கொண்டிருக்கும்போதே அழைப்பு
துண்டிக்கப்பட்டால் வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என டிராய்
உத்தரவிட்டு உள்ளது.
இந்த புதிய நடைமுறைப்படி துண்டிக்கப்படும்
அழைப்பு ஒன்றுக்கு ரூ.1 இழப்பீடு வழங்கப்படும். அழைப்பு துண்டிக்கப்பட்டால்
அதற்கான இழப்பீட்டை, அழைக்கும் வாடிக்கையாளரின் கணக்கில் 4 மணி
நேரத்துக்குள் சேர்த்து விட்டு, அது தொடர்பான விவரங்களை எஸ்.எம்.எஸ். மூலம்
சம்பந்தப்பட்ட தொலைதொடர்பு நிறுவனம், வாடிக்கையாளருக்கு தெரிவிக்க
வேண்டும்.
3 அழைப்புகளுக்கு மட்டுமே
‘போஸ்ட் பெய்டு’ வாடிக்கையாளர் என்றால் இந்த இழப்பீட்டு தொகை அடுத்த
பில்லில் கழித்து, அதற்கான விவரங்களை பில்லில் தெரிவிக்க வேண்டும்.
எனினும்
நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 3 அழைப்பு துண்டிப்புகளுக்கு மட்டுமே இழப்பீடு
வழங்கப்படும். இந்த புதிய நடைமுறை அடுத்த ஆண்டு (2016) ஜனவரி 1–ந்தேதி
முதல் அமலுக்கு வரும் என டிராய் அறிவித்து உள்ளது.
டிராய் கவனிக்கும்
இந்த நடைமுறையை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பின்பற்றுகின்றனவா?
அழைப்பு துண்டிப்பு நிகழ்வுகளை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு
வருகின்றனவா? போன்றவை கூர்ந்து கவனிக்கப்படும் என்று கூறியுள்ள டிராய்
அமைப்பு, இந்த நடவடிக்கைகள் 6 மாதங்களுக்குப்பின் மீண்டும் மறு ஆய்வு
செய்யப்படும் என்றும் தெரிவித்து உள்ளது.
அழைப்பு துண்டிப்பு
தொல்லையில் இருந்து வாடிக்கையாளர்கள் விடுபடவும், செல்போன் நிறுவனங்கள்
தங்கள் சேவையை மேம்படுத்திக்கொள்ளவும் டிராயின் இந்த நடவடிக்கை உதவும் என
அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.







