உலக தரவரிசையில் இந்தியா கல்வித்துறையில் சாதிக்கவில்லை என இந்திய ஜனாதிபதி வருத்தப்படுவது அவர் மட்டுமல்ல கல்வித்துறையில் உள்ள அனைவரும் தலைகுனிய வேண்டிய விசயம்.
இன்றைய கல்விமுறை மனப்பாடம் செய்வதையும் மதிப்பெண் பெறுவதையும் மட்டுமே குறிக்கோளாய் கொண்டுள்ளது.
அதிக மதிப்பெண் பெறும் மாணவனே சிறந்த அறிவாளி என்ற கருத்து இன்றளவும் நிலைத்துவருகிறது.
மாணவர்களின் பல்வேறு திறன்களுள் மனப்பாடம் செய்து அவற்றை வெளிக் கொணர்வதும் ஒரு திறன்தானே தவிர அதனை வைத்துக் கொண்டு அவனால் அனைத்தும் சாதிக்கமுடியும் என நாம் நினைத்தால் அது தவறு.
மேல்நிலையில் 1180/1200 மதிப்பெண் பெற்று இந்திய முன்னணி பொறியியல் கல்வி நிலையத்தில் சேர்ந்து முதல் பருவத்தில் அனைத்து பாடங்களிலும் தோல்வியுற்றான் எனில் அதன் குறைபாடு எங்குள்ளது என்பதை கண்டறிய வேண்டியது கல்வியாளர்களின் தலையாய கடமையாகும்.
அடிப்படை தெரியாதவனாலும் 100% மதிப்பெண் பெறலாம் என பாடத்திட்டம் மற்றும் வினாத்தாள்களை உருவாக்கி விட்டு உலகத்தளத்தில் பிரகாசிக்க முடியவில்லை என வருத்தப்படுவதில் எந்த அர்த்தமுமில்லை.
எப்படியோ மறைந்த திரு.அப்துல்கலாம் அவர்கள் நம் மண்ணில் பிறந்து உலகையே திரும்பிப்பார்க்க வைத்தார். அது நமக்கு கிடைத்த அதிசயம்/அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.
அதற்காக மதிப்பெண் எடுத்தவர்களை எல்லாம் அப்துல்கலாமாக நினைத்துக் கொண்டு வீண் மமதையில் இருந்தோமென்றால் உலக அரங்கில் கல்வியில் இந்தியா சாதிப்பது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கும்.
எனவே கல்வியாளர்கள் இதனை ஒரு சவாலாக ஏற்று பாடத்திட்டங்களிலும், முக்கியமாக வினாத்தாள்களிலும், ஒழுக்கக் கல்வி கற்பிப்பதிலும் மாற்றம் கொண்டு வர வேண்டும்.
இதற்கு ஆசிரியர்களாகிய நாமும் இதற்கு உதவ வேண்டும்.