அண்ணா பல்கலையில், 25 ஆயிரம் மாணவியர் உட்பட, 71 ஆயிரம் பேர், இன்ஜி.,
கவுன்சிலிங்குக்கு, முதல் தலைமுறை பட்ட தாரிகளாக பதிவு செய்துள்ளனர். அண்ணா
பல்கலையின் இணைப்பு கல்லூரிகளில், பி.இ., -- பி.டெக்., படிக்க, வரும்,
24ம் தேதி கவுன்சிலிங் துவங்குகிறது.
இதற்கு
விண்ணப்பித்தவர்களுக்கு, 10 இலக்க, 'ரேண்டம்' எண், நேற்று காலை
வெளியிடப்பட்டது. அண்ணா பல்கலை இணையதளத்தில், மாணவர்கள், தங்களின் பதிவு
எண்ணை பயன்படுத்தி, ரேண்டம் எண், விண்ணப்ப விவரம், மதிப்பெண்ணை அறிந்து
கொள்ளலாம். மாணவர்களின்,'கட் ஆப்' மதிப்பெண், பாடங்களின் மதிப்பெண் மற்றும்
பிறந்த தேதி ஆகியவை ஒன்றாக இருக்கும் போது, யாருக்கு முன்னுரிமை
என்பதற்கு, ரேண்டம் எண் பயன்படுத்தப்படுகிறது.ரேண்டம் எண்ணின் கூட்டுத்
தொகை யாருக்கு அதிகம் உள்ளதோ, அந்த மாணவர் தர வரிசை பட்டியலில்,
முன்னுரிமைக்கு தேர்வு செய்யப் படுவார். இந்த ஆண்டு, 2.53 லட்சம் பேர்,
'ஆன்லைனில்' விண்ணப்பங்களை பதிவு செய்தனர். அவர்களில், 1.84 லட்சம் பேர்
விண்ணப்ப கட்டணம் செலுத்தினர். அதேநேரம், அண்ணா பல்கலை அளித்த இறுதி கால
அவகாசம் வரை, ஒரு லட்சத்து, 34 ஆயிரத்து, 994 பேர் விண்ணப்பங்களை பூர்த்தி
செய்து அனுப்பியுள்ளனர். இவர்களில், 51 ஆயிரத்து, 226
பேர் மாணவியர். தொழிற்கல்வி பாடப்பிரிவில் படித்தவர்களில், 62 மாணவியர்
உட்பட, 2,180 பேர் விண்ணப்பித்துள்ளனர். மொத்த விண்ணப்பதாரர்களில், 71
ஆயிரத்து, 273 பேர் முதல் தலைமுறை பட்டதாரிகளாக பதிவு செய்துள்ளனர்;
இவர்களில், 25 ஆயிரத்து, 242 பேர் மாணவியர். விளையாட்டுப் பிரிவில், 554
மாணவியர்உட்பட, 1,807 பேர்; மாற்றுத் திறனாளிகளில், 61 மாணவியர் உட்பட, 225
பேர்; முன்னாள் ராணுவத்தினர் குடும்பத்தினரில், 750 மாணவியர் உட்பட, 1,934
பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டில், 28 ஆயிரத்து, 249 மாணவியர்
உட்பட, 80 ஆயிரத்து, 446 பேர் முதல் தலைமுறை பட்டதாரிகளாக பதிவு செய்தனர்
என்பது குறிப்பிடத்தக்கது.