தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பொதுப்பிரிவு மாணவர்களுக்கான
கலந்தாய்வு சென்னையில் செவ்வாய்க்கிழமை(ஜூன் 21) தொடங்க
உள்ளது.2016-2017-ஆம் ஆண்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில்
மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு சென்னையில் திங்கள்கிழமை
தொடங்கியது.சிறப்புப் பிரிவினர்:
முதல்நாளான
திங்கள்கிழமை சிறப்புப் பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெற்றது.விளையாட்டுப்
பிரிவு வீரர்களுக்கு சென்னை ஸ்டான்லி, சிவகங்கை, திருவண்ணாமலை ஆகிய அரசு
மருத்துவக் கல்லூரிகளில் தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்கு 7 பேர்
அழைக்கப்பட்டிருந்தனர்.இவர்களில் பரமக்குடியைச் சேர்ந்த தடகள வீராங்கனை
ஜெ.கெளரி சங்கரி, விளையாட்டுப் பிரிவில் 980 மதிப்பெண் பெற்று முதலிடத்தில்
இருந்தார். அவர் சிவகங்கை மருத்துவக் கல்லூரியைத் தேர்ந்தெடுத்தார்.
சென்னையைச் சேர்ந்த நீச்சல் வீரர் பி.முகுந்தன் விளையாட்டுப் பிரிவில் 760
மதிப்பெண் பெற்று சென்னை ஸ்டான்லி மருத்துவமனையை தேர்வு
செய்தார்.சிவகாசியைச் சேர்ந்த ஆர்.அஸ்வினி காந்திமதி விளையாட்டுப் பிரிவில்
730 மதிப்பெண் பெற்று மூன்றாவதுஇடத்தில் இருந்தார். அவர் திருவண்ணாமலை
அரசு மருத்துவக்கல்லூரியைத் தேர்ந்தெடுத்தார்.
13 இடங்கள் காலி:
முன்னாள்
ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு 5 எம்.பி.பி.எஸ். இடங்களும், ஒரு
பி.டி.எஸ். இடமும் இருந்தது. அவற்றுக்கு 60 பேர் அழைக்கப்பட்டிருந்தனர்.
கலந்தாய்வின் முடிவில் 6 இடங்களும் நிரம்பின.மாற்றுத்திறனாளிகளுக்கென்று 3
சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. அதாவது 70 எம்.பி.பி.எஸ். இடங்களும், 3
பிடிஎஸ் இடங்களும் இதில் அடங்கும். கலந்தாய்வுக்கு 92 பேர்
அழைக்கப்பட்டிருந்தனர். அதில், 11 பேர் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. 21
பேர் தகுதி இல்லாதவர்கள் என்று நிராகரிக்கப்பட்டனர். மீதம் உள்ள 60
இடங்களுக்கும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். சிறப்புப் பிரிவில்
காலியாக உள்ள 10 எம்.பி.எஸ்., 3 பிடிஎஸ் இடங்கள் செவ்வாய்க்கிழமை
நடைபெறவுள்ள பொதுப் பிரிவினருக்கான இடங்களில் சேர்க்கப்படும் என்று
அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொதுப்பிரிவினருக்கு: செவ்வாய்க்கிழமை
பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்க உள்ளது. இதில் 200-லிருந்து 198
வரை கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ள சுமார் 750 மாணவர்கள் கலந்து கொள்ள
உள்ளனர். சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் காலை 9
மணிக்கு கலந்தாய்வு தொடங்கும். முன்னதாக எம்.பி.பி.எஸ். தரவரிசைப்
பட்டியலில் முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு சுகாதாரத் துறை
அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அனுமதிக் கடிதத்தை வழங்க உள்ளார். தொடர்ந்து ஜூன்
25-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும்.நட்புக்காக மருத்துவ இடத்தை விட்டுக்
கொடுத்த மாணவி!தோழிக்காக தனக்கு கிடைத்த மருத்துவக் கல்லூரி இடத்தை ஒரு
மாணவி நட்புக்காக விட்டுக்கொடுத்துள்ளார்.
சென்னையில் திங்கள்கிழமை
நடைபெற்ற சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வில் முன்னாள் ராணுவ
வீரர்களுக்கான பிரிவில் எஸ்.வர்ஷினி, என். ஜனனி ஆகிய இருவர் கலந்து
கொண்டனர். இவர்கள் இருவரும் திருச்சி சமயபுரத்திலுள்ள ஒரே பள்ளியில்
படித்தவர்கள். இருவரும் நெருங்கிய தோழிகள்.இதில் வர்ஷினியின் கட்-ஆஃப்
மதிப்பெண் 199 ஆகும். ஆனால் இவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்.
இவரது தோழியின் கட்-ஆஃப் மதிப்பெண் 198.75 ஆகும். ஆனால்இவர்
பொதுப்பிரிவை(ஓ.சி.) சேர்ந்தவர். முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான
தரவரிசைப் பட்டியலில் இவர்கள் இருவரும் முதல் இரண்டு இடங்களைப்
பிடித்திருந்தனர்.இந்த நிலையில், கலந்தாய்வில் சென்னை மருத்துவக்
கல்லூரியில் தனக்கு கிடைத்த இடத்தை தனது தோழிக்காக விட்டுக் கொடுத்துள்ளார்
வர்ஷினி.
இதுகுறித்து வர்ஷினி கூறுகையில்,
பொதுப்பிரிவினருக்கானகலந்தாய்வில் எனக்கு சென்னை மருத்துவக் கல்லூரியில்
நிச்சயம் இடம் கிடைக்கும். ஆனால், எனது தோழி ஓ.சி. வகுப்புப் பட்டியலில்
இருப்பதால் அவருக்கு அதே கல்லூரியில் இடம் கிடைப்பதற்கான வாய்ப்பு மிகவும்
குறைவு.எனவே இந்த இடத்தை எனது தோழிக்கு விட்டுக் கொடுத்தேன்.
பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வில் கலந்து கொண்டு நானும் சென்னை மருத்துவக்
கல்லூரியில் இடம் பிடிப்பேன்.அங்கும் எங்களது நட்பு தொடரும் என்றார் அவர்.