தேசிய மனநல கழகம் மற்றும் நரம்பியல் துறை சார்பில் நாடு முழுவதும் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இதில் சுமார் 13.7 சதவீதம், அதாவது 15 கோடி இந்தியர்கள் பல்வேறு விதமான மனநல பாதிப்புக்களால் அவமதிப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. இவர்களில் 10.6 சதவீதம் பேர் உடனடியாக சிகிச்சை தேவைப்படும் நிலையில் உள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது.
நாட்டில் அதிகரித்து வரும் பிரச்னைகள் காரணமாக, அது தொடர்பாக ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்கும் பொறுப்பு 2014ம் ஆண்டு தேசிய மனநல கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த ஆய்வின் முடிவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 12 மாநிலங்களில் உள்ள 34,802 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் மது, புகை பயன்படுத்துவோர், பிரச்னைகள், மனஅழுத்தம், பயம் உள்ளிட்ட பல காரணங்கள் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன. கிராமப்புறங்களை விட நகர்புறத்தில் வசிக்கும் மக்களே மனஅழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பொருளாதார நெருக்கடி, வேகமான வாழ்க்கை முறை போன்ற பல்வேறு காரணங்களால் மனநலம் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இவர்களில் பொருளாதார காரணங்களால் ஏற்பட்ட மனஅழுத்தத்தால் மனநலம் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கையே அதிகம்.
மனநலம் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதம் பேர், ஓராண்டுக்கு மேல் ஆகியும் எந்த சிகிச்சையும் எடுத்துக் கொள்ளாமல் உள்ளனர். 40 முதல் 49 வயதுடைய பெண்களே மனஅழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். 18 வயதிற்கு கீழுள்ள 22.4 சதவீதம் பேர் போதை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அதிகம் பயன்படுத்தியதால் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒட்டுமொத்த காரணங்களையும் ஆராய்கையில் 13.9 சதவீத ஆண்களும், 7.5 சதவீத பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.