பிராணாயாமம் எனில் ‘பிராண சக்தியை அதிகமாக்குதல்’ என்று அர்த்தம். சிலர்
பிராணனை தெய்வீக சக்தியாகவும் பார்ப்பதுண்டு. ஆகவே நமது தெய்வீக சக்தியில்
வேலை செய்வது என்றும் இதை எடுத்துக் கொள்ளலாம். மூச்சைப் பயன்படுத்தி பலவித பலன்களும் பெறுவது பிராணாயாமத்தில் சாத்தியம். பெரும்பாலும் மூக்குவழிதான் மூச்சைப் பயன்படுத்தினாலும், சிலநேரப் பயிற்சியில் மூச்சு, தொண்டையை மையமிட்டு இருக்கும். மிக அரிதாகவே வாய்வழியாக மூச்சை எடுப்பதோ அல்லது வெளிவிடுவதோ நடக்கும். ஒரு மூச்சுக்கும் அடுத்த மூச்சுக்கும் சிறிய இடைவெளி இருக்க வேண்டும். மூச்சை உள்ளெடுப்பது-வெளியே விடுவது தவிர, உள் மூச்சுக்குப்பின் நிறுத்துவது, வெளி மூச்சுக்குப்பின் நிறுத்துவது, மூச்சின்போது எண்ணிக்கையைப் பயன்படுத்துவது, அதை மெல்ல மெல்ல அதிகப்படுத்துவது, மூச்சின்போது ஒலியைப் பயன்படுத்துவது, மூச்சோடு மந்திரங்களைப் பயன்படுத்துதல்... என்று நிறைய முறைகள் உள்ளன.








