பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற ரிசர்வ் வங்கியில் குவியும் மக்கள் :
பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான கெடு இன்றுடன் முடிவதால், சென்னையில்
உள்ள ரிசர்வ் வங்கியை, நேற்று ஏராளமானோர் முற்றுகையிட்டனர். மத்திய அரசு,
2016 நவ., 8 நள்ளிரவில், 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாததாக
அறிவித்தது. பொதுமக்கள், டிச., 31 வரை, வங்கிகளிலும், மார்ச் 31 வரை,
ரிசர்வ் வங்கியிலும் மாற்றிக் கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டது.
பொதுமக்களிடம் உள்ள, பழைய ரூபாய் நோட்டுகளை, வங்கிக் கணக்கில், 'டிபாசிட்'
செய்ய அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில், டிச., 31க்குப் பின், வங்கிகளில்
கெடு முடிந்ததால், பழைய நோட்டுகளை மாற்ற, மக்கள் ரிசர்வ் வங்கிக்கு
சென்றனர். 'டிச., 31 வரை, வெளிநாடு சென்றிருந்தோர் மட்டுமே, பழைய ரூபாய்
நோட்டுகளை மாற்றலாம்' என, விளக்கம் அளிக்கப்பட்டது. எனினும், மக்கள்
தொடர்ந்து, ரிசர்வ் வங்கிக்கு சென்று திரும்பினர். இதற்கிடையில், வெளிநாடு
சென்று திரும்பியோர், விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளிடம், தங்களிடம்
உள்ள தொகைக்கு உரிய அத்தாட்சியை பெற்று வந்தால் மட்டுமே, பழைய நோட்டுகள்
மாற்றப்படும் என, ரிசர்வ் வங்கி தெரிவித்தது
. 'விமான நிலையத்தில் அது
பற்றிய அறிவிப்பு ஏதும் இல்லை' என, பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், வெளிநாடு சென்று திரும்பியோர், பழைய ரூபாய் நோட்டுகளை
மாற்றுவதற்கான கெடு, இன்றுடன் முடிகிறது. அதனால், சில நாட்களாக, சென்னை
ரிசர்வ் வங்கிக் கிளையில், மிக அதிக அளவில் மக்கள் குவிந்து வருகின்றனர்.
நேற்றும், ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.தமிழகத்தின் பல
பகுதிகள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்தும், மக்கள் அதிக அளவில்
வந்திருந்தனர். வெளிநாட்டில் இருந்து திரும்பியதற்கான, உரிய ஆவணம்
வைத்திருந்தோர் மட்டும் வங்கிக்குள் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள், பழைய
ரூபாய் நோட்டுகள், நாளை முதல் செல்லா காசாகிவிடும் என்பதால், ஏமாற்றத்துடன்
திரும்பி சென்றனர்.