நிகர்நிலை மருத்துவ பல்கலை அவமதிப்பு மனு முடித்து வைப்பு.
சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர் மேனன் தொடர்ந்த வழக்கை, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' விசாரித்தது. புதுச்சேரியில் உள்ள, நிகர்நிலை மருத்துவ பல்கலைகளில், மருத்துவப் படிப்புக்கான கல்வி
கட்டணத்தை நிர்ணயிக்க, விரைவில் குழு அமைக்கவும், அதுவரை, முதுகலை மருத்துவ படிப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களிடம், 10 லட்சம் ரூபாயை கட்டணமாக பெறவும், முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.
இந்த இடைக்கால உத்தரவு, 2017 ஜூன், 16ல் பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து, தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களை சேர்ப்பதற்கு, நிகர்நிலை பல்கலைகள் மறுப்பதாகவும், நீதிமன்ற உத்தரவை பின்பற்றாததால், அவர்களை தண்டிக்கும்படியும், உயர் நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு மனுவை, வழக்கறிஞர் மேனன்
தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:
நிகர்நிலை பல்கலைகள்
சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 'இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதற்கு முன், இடங்கள் நிரப்பப்பட்டு விட்டன; ஒரு சில இடங்கள் மட்டுமே காலியாக இருந்தன' என, கூறப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் மாண்பை குறைக்கும் வகையில், வேண்டுமென்றே உத்தரவு
மீறப்பட்டுள்ளதா என்பதை மட்டுமே, அவமதிப்பு வழக்கில் பார்க்க
முடியும்.இடைக்கால உத்தரவு
பிறப்பிக்கும் போது, நான்கு இடங்கள் தவிர, வேறு காலியிடங்கள் இல்லை. எனவே, நீதிமன்ற
உத்தரவை, நிகர்நிலை பல்கலைகள் மீறியதாக கூற முடியாது. அதனால், அவர்களுக்கு எதிராக
அவமதிப்பு வழக்கு, கைவிடப்படுகிறது.
இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.








