மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பொருளாதாக வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் நோக்கத்துடன் கார்ப்பரேட் வரி விகிதத்தை சமீபத்தில் குறைத்து அறிவித்தார். இந்நிலையில், தனிநபர் வருமான வரி விகிதங்களை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
இந்தியாவில் தற்போது தனிநபர் வருமானத்திற்காக மூன்று அடுக்குகளாக வரி விதிக்கப்படுகிறது. அதன்படி தற்போது 2.5 லட்ச ரூபாய் வரை உள்ள வருமானத்திற்கு வரி விதிக்கப்படுவதில்லை. முதல் அடுக்கில் ரூ.3 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை வருமானத்திற்கு, 5 சதவீத வரி விதிக்கப்படுகிறது. ரூ.5 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான இரண்டாவது அடுக்கிற்கு 20 சதவீத வரியும், ரூ.10 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 30 சதவீத வரியும் விதிக்கப்படுகிறது.
தற்போதுள்ள வருமான வரிச் சட்டத்தை மறுஆய்வுக்கு உட்படுத்தி, நாட்டின் பொருளாதாரத் தேவைக்கு ஏற்ப, புதிய சட்டத்தை இயற்றுவது குறித்து பரிந்துரைப்பதற்காக, நேரடி வரி தொடர்பான பணிக்குழு கடந்த 2017ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் சார்பாக வருமான வரி விதிப்பு அடுக்குகளை உயர்த்தவும், வரி விகிதத்தை குறைக்கவும் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பரிந்துரைகளின் படி, ரூ.5 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான இரண்டாவது அடுக்கிற்கு 10 சதவீதமாக குறைக்கப்படுவதாகவும், ரூ.10 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 25 சதவீதமாக குறைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதன்மூலம் வருமான வரி செலுத்துபவர்களுக்கு குறைந்தது 5 சதவீதம் அளவுக்கு பயனளிக்கும் வகையில் மாற்றங்கள் இருக்கும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வருமான வரி விகித மாற்றங்களை வருகின்ற தீபாவளிக்கு முன்பே, மத்திய அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.








