தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தை குறைக்க
பொதுமக்கள் 3 அடுக்கு முககவசம் அல்லது துணியால் ஆன முககவசங்களை அணிந்தால்
போதுமானது.
முககவசம் உபயோகிப்பது எப்படி?
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மக்களை
முடக்கி போட்டு உள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரசுக்கு எதிரான போர் நடந்து
வருகிறது. இந்த போரில் வைரசிடம் இருந்து மக்கள் தங்களை தற்காத்துக்
கொள்ளும் கேடயமாக சமூக இடைவெளி, தனித்து இருத்தல், முககவசம் அணிதல்
உள்ளிட்டவற்றை அரசு அறிவுறுத்தி வருகிறது. இதற்காக ஊரடங்கு உத்தரவும்
பிறப்பிக்கப்பட்டு உள்ளது. முககவசம் அணியாமல் வெளியில் சென்றால் அபராதம்
விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதனால் மக்கள் முககவசம் அணியும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு விட்டனர்.
ஏற்கனவே பலர் கைக்குட்டைகள், துண்டு, சேலை முந்தானை ஆகியவற்றை முககவசமாக
பயன்படுத்தி வந்தனர். அவர்களும் வேகமாக முககவசத்துக்கு மாறி உள்ளனர். இந்த
முககவசம் பெயரளவுக்கு அணியும் வகையில் இருக்கக்கூடாது. அதனை முறையாக
பராமரித்து அணிய வேண்டும். அப்போது தான் நோயின் தாக்கத்தில் இருந்து விடுபட
முடியும் என்கிறார், அரசு டாக்டர் ஒருவர்.
அவர் முககவசத்தை எப்படி உபயோகிப்பது என்பது குறித்தும் இங்கு விளக்குகிறார்...
ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொரு விதமான முககவசங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தை குறைக்க பொதுமக்கள் 3 அடுக்கு முககவசம்
அல்லது துணியால் ஆன முககவசங்களை அணிந்தால் போதுமானது. ஒவ்வொருவரும் 3
முககவசங்களை வைத்துக் கொண்டு சுழற்சி முறையில் உபயோகிக்க வேண்டும். ஒருநாள்
உபயோகித்ததை துவைத்து காயப்போட்ட பிறகு 3 நாள் கழித்து அதனை மீண்டும்
பயன்படுத்த வேண்டும். முககவசத்தை எக்காரணம் கொண்டும் முன்பகுதியில் கைகளால்
தொடுவதை தவிர்க்க வேண்டும். இது நோய் கிருமிகள் நமக்குள் எளிதில் பரவும்
வாய்ப்பை உருவாக்கும். முககவசத்தை கழற்றும்போது, கயிற்றை பிடித்து மட்டுமே
கழற்ற வேண்டும்.
என்.95 என்ற முககவசம் உள்ளது. இந்த முககவசத்தை பொதுமக்கள் அணிய வேண்டிய
அவசியம் இல்லை. இது அதிக விலை கொண்டது. மிகவும் நுண்ணிய கிருமிகளையும்
தடுக்கும். கொரோனா நோயாளிகளை நேரடியாக கையாளக்கூடிய சுகாதார பணியாளர்கள்
இந்த முககவசத்தை அணிய வேண்டும். ஒரு முககவசத்தை 6 மணி நேரம் முதல் 8 மணி
நேரம் வரை மட்டுமே அணிய வேண்டும். ஆகையால் பொதுமக்கள் கவனமுடன் முககவசத்தை
கையாண்டு நோய் தொற்றில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று
கூறினார், அந்த டாக்டர்.