கல்லுாரிகளில் அதிக காலியிடங்கள் உள்ளதால், அனைத்து பல்கலைகளிலும், 'அரியர்' தேர்வு முடிவுகளை, விரைவில் அறிவிக்கும்படி, உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளின் செமஸ்டர் தேர்வுகளை, தமிழக உயர் கல்வித்துறை ரத்து செய்தது. இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும், 'ஆன்லைனில்' தேர்வு நடத்தப்பட்டது. மற்றவர்களுக்கு, 'ஆல் பாஸ்' வழங்கப் பட்டது.இதன்படி, சென்னை பல்கலை கட்டுப்பாட்டில் உள்ள, 285 கல்லுாரிகளில், அரியர் தேர்வுக்கு விண்ணப்பித்த அனைவருக்கும், ஆல் பாஸ் வழங்கி, 'ரிசல்ட்' வெளியிடப்பட்டு உள்ளது.
இதன்படி, அனைத்து பல்கலைகளும், அரியர் தேர்வு முடிவுகளை, விரைவில் வெளியிட வேண்டும் என, உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு கல்லுாரிகள் மற்றும் தனியார் கல்லுாரிகள் என, அனைத்திலும், முதுநிலை படிப்புக்கு மாணவர் சேர்க்கை மிகவும் குறைந்துள்ளதால், இளநிலை முடிவுகளை வெளியிட உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
'ஆல் பாஸ்' முடிவில் தேர்ச்சி பெறும் பட்டதாரிகளை, முதுநிலை படிப்பில் சேர்க்கவும், கல்லுாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக, மாணவர் சேர்க்கையை, நவம்பர் முழுதும் நடத்த, கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.