கிராம ஊராட்சிகளில் 16 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள்: முதல்வர் ஜ உத்தரவு:
கிராம ஊராட்சிகளில் 16 ஆயிரத்து 726 துப்புரவு பணியாளர்களை நியமிக்க
முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதற்காக, ஆண்டுக்கு ரூ.41.81 கோடி
செலவு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இது குறித்து தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:திறந்த வெளி மலம் கழித்தலைத் தடுப்பதற்காக முதல்வர் ஜெயலலிதாவின்
முந்தைய ஆட்சிக் காலத்தில் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகங்கள்
ஏற்படுத்தப்பட்டன.
பின்னர், இந்த வளாகங்கள் சரியாக பராமரிக்கப்படவில்லை. மூன்றாவது முறையாக
தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றவுடன், பராமரிக்காமல் இருந்த 12
ஆயிரத்து 796 மகளிர் சுகாதார வளாகங்களை ரூ.170 கோடி செலவில் புதுப்பிக்க
உத்தரவிட்டார். மேலும், ரூ.35 கோடி செலவில் 770 ஆண்கள் சுகாதார வளாகங்கள்
கட்டவும் அவர் உத்தரவிட்டார்.
கிராமங்களை தூய்மையாக வைத்திருப்பதை ஊக்குவிக்கும் வகையில், தூய்மையான
கிராம இயக்கத்தின் மூலம் 100 சதவீதம் சுகாதாரத்தினை எய்தும் ஊராட்சிகளுக்கு
ரூ.5 லட்சம் பரிசுத் தொகை வழங்கவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இதன்
அடிப்படையில் கடந்த நிதியாண்டு தூய்மையான கிராமங்களாக 31 ஊராட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
துப்புரவு பணியாளர்கள் நியமனம்: கிராமங்களைத் தூய்மையாக வைத்திருக்க
அடிப்படையாக இருப்பவர்கள் துப்புரவு பணியாளர்கள். இப்போது ஊராட்சிகளில்
பணியாற்றும் துப்புரவு பணியாளர்களின் எண்ணிக்கை அங்குள்ள மக்கள் தொகைக்கு
ஏற்றவாறு இல்லாமல் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளது.
எனவே, தமிழகம் முழுவதும் தூய்மை கிராம இயக்கத்தினை நல்ல முறையில்
செயல்படுத்த மக்கள் தொகை 3 ஆயிரத்துக்கும் கீழுள்ள 8 ஆயிரத்து 469 கிராம
ஊராட்சிகளில், ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கு கூடுதலாக ஒன்று வீதமும், 10
ஆயிரம் வரையுள்ள 3 ஆயிரத்து 908 கிராம ஊராட்சிகளில், ஒவ்வொரு கிராம
ஊராட்சிக்கு கூடுதலாக இரண்டு வீதமும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள்
தொகை கொண்ட 147 கிராம ஊராட்சிகளில், ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் கூடுதலாக
மூன்று வீதமும் என மொத்தம் 16 ஆயிர்தது 726 துப்புரவு பணியாளர் பணியிடங்களை
கூடுதலாக ஏற்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
சம்பளம் எவ்வளவு? புதிதாக உருவாக்கப்படும்
பணியிடங்களில் பணியமர்த்தப்படுபவர்களுக்கு மாதம்தோறும் தொகுப்பூதியமாக ரூ.2
ஆயிரமும், அகவிலைப்படியாக ரூ.40-ம் வழங்கப்படும். இதன் மூலம் ஆண்டுக்கு
ரூ.41.81 கோடி செலவு ஏற்படும். அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம் தமிழகம்
முழுவதும் தூய்மையான கிராமங்கள் அதிகளவில் உருவாவதற்கு வழிவகை ஏற்படும்
என்று அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது