செங்கல் சூளையில் வேலை-பாலிடெக்னிக் தேர்வில் 6 பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் !
செங்கல் சூளையில் கூலி வேலை செய்து, அதில் கிடைத்த வருமானத்தில் பயின்ற, நெல்லை மாவட்டம் முத்துகிருஷ்ணபேரி கிராமத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி என்ற மாணவர், பாலிடெக்னிக் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
பாவூர்சத்திரம் எம்.எஸ்.பி. வேலாயுத நாடார் லட்சுமி தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில், சிவில் என்ஜினீயரிங் பாடப்பிரிவில் பயின்ற கணேச மூர்த்தி, இறுதிப் பருவத்தேர்வில், 600-க்கு 596 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். டவுன் பிளானிங் (Town Planning) பாடம் தவிர மற்ற அனைத்துப் பாடங்களிலும் நூற்றுக்கு நூறு (சென்டம்). அவரது ஆசிரியர்கள் வழிகாட்டுதல்படி, டவுன் பிளானிங் பாடத்திற்கு மறுமதிப்பீடு (Revaluation) செய்யவே, அப்பாடத்திலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் கிடைத்தது. அதாவது 6 பாடங்களிலும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் கணேசமூர்த்தி.
“அப்பா மதியழகன், விவசாயக் கூலி. அம்மா வள்ளியம்மாள், பீடி சுற்றும் தொழிலாளி. அக்கா, அண்ணன் யாரும் படிக்கல. நான் மட்டும்தான் முதல் தலைமுறையா படிக்கிறேன். என் பெற்றோர் படும் கஷ்டந்தான், இன்னும் படிக்கணும் இன்னும் படிக்கணும் என்கிற ஆர்வத்தை ஏற்படுத்துச்சு. அவங்க சம்பாதிக்கிற பணத்துல, குடும்பத்தை நடத்துறதே ரொம்பக் கஷ்டம். காலேஜ்ல வருஷத்துக்கு 40,000 ரூபாய் ஃபீஸ் கட்டணும். போக்குவரத்துச் செலவு தனி. இவ்வளவு பணத்தை வீட்டுல கேட்டு, அவங்கள கஷ்டப்படுத்த நான் விரும்பல. லீவு கிடைக்கும் போதெல்லாம், எங்க ஊர்ல இருக்கிற செங்கல் சூளை, சா மில், புரோட்டாக் கடைக்கு வேலைக்குப் போயிடுவேன். அதுல கிடைக்கிற பணத்தை காலேஜ் ஃபீஸ் கட்ட சேர்த்து வைப்பேன். எங்க அப்பா அம்மாவும் கொஞ்சம் பணம் தருவாங்க. அதை வெச்சு காலேஜ் ஃபீஸ் கட்டிடுவேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் பாடத்தை படிச்சு முடிச்சிடுவேன்.
பாடத்த மனசுல ஏத்துறதுக்கு முன்னால, எங்க குடும்பக் கஷ்டத்தை மனசுல ஏத்திக்கிடுவேன். வீட்டுச் சூழ்நிலையை நல்லா புரிஞ்சு வெச்சிக்கிட்டதாலதான், என்னால ஸ்டேட் ஃப்ர்ஸ்ட் வாங்க முடிஞ்சது. வறுமையைக் காரணம் காட்டி யாரும் படிப்பை பாதியில நிறுத்திடாதீங்க. உங்ககிட்ட இருக்கிற வறுமையை விரட்டணும்னா கல்வியாலதான் அது முடியும்” என்று நெகிழ்ச்சியுடன் பேசுகிறார் கணேசமூர்த்தி.
“என் மகன் முதல் தலைமுறையா படிச்சி இவ்வளவு மார்க் வாங்கியிருக்கிறதப் பார்க்கும்போது, எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு. எதிர்காலத்துல என் மகன் என்ன படிக்க விரும்புகிறானோ, அதை நான் நிறைவேத்தி வைப்பேன்” என்கிறார், கணேசமூர்த்தியின் தந்தை மதியழகன்.
கணேசமூர்த்தி தற்போது, திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில், இரண்டாமாண்டு சிவில் என்ஜினீயரிங் பயின்று வருகிறார். இப்போதும் கணேசமூர்த்தி, விடுமுறை நாட்களில் சா மில் வேலைக்குச் சென்று, அதில் கிடைக்கும் வருமானத்தை, படிப்பு சார்ந்த செலவுகளுக்குப் பயன்படுத்திக்கொள்கிறார். THANKS TO PUTHIYATHALAIMURAI..








