காசு, பணம், துட்டு, டப்பு-இதனைப் பற்றி தெரிந்துகொள்வோம்:
காசு, பணம், துட்டு, டப்பு எல்லாம் பார்த்திருக்கிறீர்களா? எல்லாம் ஒண்ணுதானே? ஒண்ணுதான். ஆனால் வேற வேற...தட்டையாகவும் வட்டமாகவும்
அச்சடிக்கப்பட்ட உலோகமே காசு என்று அழைக்கப்படுகிறது.
காசுகளைப் போல பணம் என்பது தமிழகத்தின் இன்னொருவகை நாணயம். ஆங்கிலேயர் காலத்தில், 80 காசுகள் சேர்ந்தது ஒரு பணம்.
துட்டு என்பது நாணயத்தைக் குறிக்கும் தெலுங்கு சொல். துட்டுகள் நல்ல எடையுடைய நாணயங்கள். ஆங்கிலேயர்கள் காலத்தில் 10 காசுகள் சேர்ந்தது ஒரு துட்டு. பிரெஞ்சுக் காரர்கள் 4 காசுகள் சேர்ந்தது ஒரு துட்டு என்றார்கள். இதில், இதில் கால்துட்டு, அரை துட்டு என்று பின்ன நாணயங்களும் உண்டு. டப்பு என்பதும் நாணயத்தைக் குறிக்கும் தெலுங்குச் சொல்லாகும், இது துட்டைவிட உயர் மதிப்புடைய நாணயத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. ஆங்கிலேயர் காலத்தில், ஒரு டப்பு என்பது இரண்டு துட்டுகளுக்கு சமம் (அதாவது 1 டப்பு = 20 காசுகள்). டப்பு மற்றும் துட்டு நாணயங்கள் தெலுங்கு மொழி பேசும் மக்களுக்காக வெளியிடப்பட்டவை.
காசு, பணம், துட்டு, டப்பு - இவை அனைத்துமே தென்னிந்தியாவில் பல நூற்றாண்டுகளாகப் புழங்கி வந்த நாணயங்கள். இவற்றின் மதிப்பு நிலையில்லாததாகவும் இடத்திற்கு இடம் மாறுபடுவதாகவும் இருந்தது. இந்த நாணயங்கள் இந்தியா முழுமைக்கும் ஆங்கிலேயர்கள் ஒருங்கிணைந்த நாணய முறையைக் கொண்டுவந்து, ரூபாய்களையும் அணாக்களையும் அறிமுகப்படுத்தும் வரையில் தொடர்ந்தன. இதையெல்லாம் ஓரு சேரப் பார்ப்பதற்கான வாய்ப்பை மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் ஏற்படுத்தித் தந்தது பயிற்று அமைப்பு. சென்னையில் இந்த அமைப்பு ஏற்பாடு செய்த கண்காட்சியில், கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து இன்றைய காலம் வரை உள்ள 360 நாணயங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. நம்முடைய வரலாற்றை பள்ளி மாணவர்கள் நாணயங்கள் வழியாக தெரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் இக்கண்காட்சியின் நோக்கம். இதனைப் பார்த்து விட்டுச் சென்ற மாணவர்களுக்கு எப்பகுதியில் யார் யார் ஆண்டார்கள், அவர்களது கால வரிசை, அவர்கள் வெளியிட்ட நாணயம் போன்றவை மனதில் எளிதில் பதியும். வகுப்பில் மூன்று நாள் எடுக்கும் வரலாற்றுப் பாடத்திற்கு ஆகும் நேரத்தை விட, இந்தக் கண்காட்சியைப் பார்வையிட செலவிடப்படும் அரை மணி நேரம் கற்றுத்தந்து விடும்" என்கிறார், பயிற்று அமைப்பின் நிறுவனர் மன்னர் மன்னன்.
இதென்ன ‘பயிற்று’ என்று கேட்டதற்கு, ஒரு பாடத்தை மாணவனுக்கு சொல்லித்தருவது என்பது பாடம் நடத்துவது மட்டுமே. அவனை கையோடு கூட்டிச் சென்று அதனை நேரடியாகப் புரிந்து கொள்ள வைத்து கற்றுத் தருவதே பயிற்று ஆகும். அறிவியல், கணிதம், மொழிப்பாடங்கள் என எல்லாப் பாடத்தையும் செய்முறைகள் மூலம் நேரில் விளக்கம் சொல்லிவிட முடியும். ஆனால், வரலாற்றைப் படிக்க மட்டுமே முடியும், வரலாற்றை மாணவர்களுக்கு ‘பயிற்று’விப்பதை இலக்காகக் கொண்டுதான் இந்த அமைப்பை சென்ற ஆண்டு துவக்கினோம். இதன் மூலம், பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு வரலாறு மட்டுமன்றி பல்வேறு பாடங்களையும் கற்றுத் தருகிறோம்" என்கிறார் அவர்.








