உரிய கல்வியின்றி குழந்தைத் திருமணங்கள் அதிகரிப்பு: அரசு உதவியுடன் குழந்தைகளுக்கு கல்வி:
சிவகங்கை மாவட்டத்தில் சிறுமிகளுக்கு நடக்கவிருந்த திருமணத்தை குழந்தைகள் நலக்குழுவினர் தடுத்து நிறுத்தினர். உரிய காலத்தில் கல்வி கிடைக்காததால் இவை மறைமுகமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
சிவகங்கை, திருப்புத்தூர் அருகே தளக்காவூர், அய்யாபட்டி,
சிங்கம்புணரி ஆகிய ஊர்களில் 18 வயது நிறைவு பெறாத 3 சிறுமிகளுக்கு திருமண
ஏற்பாடு நடப்பதாக தகவல் வந்தது.
குழந்தைகள் நலக்குழு மாவட்ட தலைவர் பால்ராஜ், நன்னடத்தை
அலுவலர் சிவக்குமார், குழந்தைகள் பாதுகாப்பு அழகு சத்யமூர்த்தி, ஈஸ்வரன்
ஆகியோர், விசாரித்தனர். இதில், சிங்கம்புணரி, அய்யாபட்டியில் ஓரிரு நாளில்
நடக்க இருந்த இரண்டு சிறுமிகளின் திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
சிறுமிகளை படிக்க வைக்கும் நோக்கில் சிவகங்கை அரசு காப்பகத்தில் தங்க
வைத்தனர்.
குழந்தைகள் நலக்குழு பால்ராஜ், சிவக்குமார் ஆகியோர்
கூறியதாவது: "16வயதான அய்யாபட்டி சிறுமி 11ம் வகுப்பு படிக்கிறார். பத்தாம்
வகுப்பு தேர்வில் 450 மதிப்பெண் எடுத்தார். இவரது தந்தை மதுவுக்கு
அடிமையானவர். கட்டட தொழிலாளியான இவரது தாய் ஓட்டலில் வேலை பார்க்கும் தனது
சித்தப்பா மகனுக்கு, தனது மகளை திருமணம் முடிக்க திட்டமிட்டார்.
மாப்பிள்ளை வயது 32. சிங்கம்புணரி சிறுமி, தந்தையை குழந்தை
பருவம் முதலே பிரிந்து தாயாருடன் வசிக்கிறார். இவரது தாயார் கயிறு
திரிக்கும் தொழில் செய்கிறார். வசதியின்றி 10ம் வகுப்பை பாதியிலேயே
நிறுத்திவிட்டார். வெற்றியூரை சேர்ந்த 33 வயதினருக்கு திருமணம் முடிக்க
திட்டமிட்டனர்.
குடும்ப சூழல் காரணமாக படிக்க வசதியின்றி, திருமண ஏற்பாடு
நடப்பதை அறிந்தோம். அரசு உதவியுடன் இருவரையும் படிக்க வைக்க திட்டமிட்டோம்.
இதனால், குடும்பத்தினரே திருமணத்தை நிறுத்தினர். சான்று அவசியம்: இது
போன்ற குழந்தை திருமணத்தை தடுக்க கல்யாண மண்டபம், பத்திரிகை அடிக்கும்
அச்சகங்களில் வயது சான்று பெறவேண்டும். ஊராட்சி தலைவர்கள், இத்திருமணத்தை
தடுக்கலாம்.
உலகளவில் 20 நிமிடத்திற்கு 20 குழந்தை திருமணம் நடக்கிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் 44 சதவீதமாக இருந்த குழந்தை திருமணம் தற்போது
14 சதவீதமாக குறைந்துள்ளன. இம்மாவட்டத்தில், கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 21
குழந்தை திருமணத்தை நிறுத்தியுள்ளோம்" என்றனர்.







