போட்டித் தேர்வு: ஏழை பட்டதாரிகளுக்கு இலவசப் பயிற்சி:
சென்னையில் உள்ள ஏழை இளைஞர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான பயிற்சி வகுப்புகளை முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
சென்னையில் உள்ள படித்த ஏழை பட்டதாரி இளைஞர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.), மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்
(யு.பி.எஸ்.சி.) மற்றும் இதர போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கட்டணமில்லா
பயிற்சி வழங்க தமிழக அரசு முடிவு செய்தது.
இதன்படி, முதல்கட்டமாக 710 ஏழை எளிய பட்டதாரி இளைஞர்களுக்கு கட்டணமில்லாமல் பயிற்சி அளிக்கப்படுகிறது.
சைதாப்பேட்டை மாநகராட்சி ஆண்கள் பள்ளி மற்றும் பெரம்பூர் பந்தர்
கார்டனில் மாநகராட்சி பள்ளிகளில் புதிதாக அமைக்கப்பட்ட 2 பயிற்சி மையங்களை
முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்துள்ளார். இது தொடர்பாக தலைமைச் செயலகத்தில்
நடந்த நிகழ்ச்சியில் 4 மாணவர்களுக்கு சேர்க்கைக் கடிதங்களையும் அவர்
வழங்கினார்.
மாநகராட்சி நூலகத்தில் அனுமதி: இந்நிலையில் மாநகராட்சியின் தலைமை அலுவலக
வளாகத்தில் உள்ள நூலகத்தில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களை
அனுமதிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதுவரை மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டும் இந்த நூலகத்தைப் பயன்படுத்திவந்தனர்.
தற்போது ஏழை பட்டதாரிகளுக்கு கட்டணமில்லா பயிற்சியை வழங்கும் நிலையில்
மாநகராட்சி நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருப்பது
பயனுள்ள நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
மேலும், போட்டித் தேர்வுகளுக்கு படிக்கத் தேவையான புத்தகங்களை கொள்முதல்
செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.








