நாடோடி வாழ்க்கை: குழந்தைகள் கல்வி கற்க வழி கிடைக்குமா?
ஊர், ஊராக சுற்றி மூங்கில் கூடை பின்னி விற்பனை செய்து வரும் நாடோடிகளின் குழந்தைகள் படிக்க வழியில்லாமல் ஏங்கித்தவித்து வருகின்றனர்.சாலையோரம் நுற்றுக்கணக்கான வாகனங்கள் தினமும் செல்கின்றன. ஆனால், சாலையோரங்களில் இருக்கும் மனிதர்களை யாரும் கவனிப்பது கிடையாது. இது மாதிரி கரூர் தாந்தோனி யூனியன் அலுவலகம் அருகில் மூங்கில் கூடை செய்யும் நாடோடிகளை யாரும் கவனிதிருக்க மாட்டார்கள்.
இருப்பினும் கூடையை வாங்க வரும் சிலர் மட்டுமே அவர் அருகில் வருகின்றனர். டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களில் கவரில் குறித்த விலையைக் கொடுக்கும் இவர்கள் 250 ரூபாய் கூடையை 150 ரூபாய் என, பேரம் பேசுகின்றனர். அப்படி பேரம் கேட்பவர்களிடம் இனிய முகத்துடன் விலை பேசி கூடைகளை விற்பனை செய்யும் நாடடோடி மனிதன் கந்தன்.
இவருக்குச் சொந்த ஊர், வீடு எதுவும் கிடையாது. கடந்த 30 ஆண்டுக்கு முன் ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் மூங்கில் கூடை பின்னி விற்பனை செய்து வந்தார். அங்கு வியாபாரம் குறைய தொடங்க, நாடோடி போல ஊர், ஊராக சுற்றித் திரிந்து வருகின்றார்.
இதுகுறித்து கந்தன் கூறியதாவது: "கடந்த 30 ஆண்டுக்கும் மேலாக சென்னிமலை தாலுகா அலுவலகம் அருகில் தங்கி கூடை பின்னும் தொழில் செய்து வந்தோம். எங்களுக்கு என்று வீடு கிடையாது. எனக்கு, மூன்று மகன்கள் உள்ளனர். மூன்றாவது மகன் அர்ஜூனன் மட்டும் என்னோடு கூடை பின்னி வருகின்றான். மற்ற இரண்டு மகன்கள் அப்பகுதியில் கூலி வேலை செய்கின்றனர்.
இரண்டாவது மகன் மனைவி இறந்து விட்டதால் அவர்கள் மகன்களை என்னோடு அழைத்துச் செல்கின்றேன். இதில் சத்தீஸ், 11, ஆறாம் வகுப்பு வரையும், முத்து, 8, கோபி, பள்ளியில் சேர்க்கவில்லை. சென்னிமலையிருந்து கிளம்பிய பிறகு பேரன்களை படிக்க வைக்க முடியவில்லை.
நாங்கள் போகும் பகுதியில் மூங்கிலை விலைக்கு வாங்கி அவற்றை சிறு கீற்றுக்களாக மாற்றி கூடை, மூங்கில் தட்டு தயாரிக்கிறோம். இதில், தட்டு கூடை, பொட்டி கூடை, கொடாப்பூகூடை போன்றவைகளை செய்து வருகின்றோம். ஒரு கூடை 150 முதல் 250 ரூபாய் வரை தெருத் தெருவாக சென்று விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றோம்.
தினமும் கூடையை விற்பதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு அன்றாடம் சமையல் பொருட்களை வாங்குகின்றோம். பின் சாலையோரத்தில் சமைத்து சாப்பிட்டு விட்டு, அங்கேயே படுத்து தூங்குகின்றோம். இங்கு வியாபாரம் குறைந்த பிறகு வேறு ஊரை தேடி செல்கின்றோம்.
ஊர், ஊராக பிழைப்பு தேடிச் செல்வதால் எங்கள் தலைமுறையில் யாரும் தொடர்ந்து படிக்கவில்லை. எங்களுக்கு அரசு எந்த உதவியும் செய்யவில்லை.
தற்போது பிளாஸ்டிக் கூடைகள், தட்டுக்கள், அலங்கார ஜார்கள் என அனைத்தும் பிளாஸ்டிக் மயமானதால் மூங்கில் கூடை மவுசு இழந்து வருகிறது. பிளாஸ்டிக் பொருட்களின் ஆயுட்காலம் குறைவு. விரைவாக அவை உடைந்தும், அழகு இழந்தும் விடும். மூங்கில் கூடை எத்தனை ஆண்டுகள் ஆனாலும், அப்படியே இருக்கும். இவற்றை கழுவியும், ஆயில் பெயின்ட் போன்றவைகளை அடித்தும் வைத்தால், மிக அழகாக பல ஆண்டு பயன்தரும்." இவ்வாறு அவர் கூறினார்.
படிக்க ஆர்வமாக இருக்கும் இந்த குழந்தைகள் பிழைப்பு காரணமாக நடோடிகளாக செல்ல வேண்டி உள்ளது. எனவே, கட்டாய கல்விச் சட்டம் அமலில் இருக்கும் சூழ்நிலையில் கரூர் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு குழந்தைகள் கல்வி கற்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.







