புதிய பொறியியல் கல்லூரி துவங்குவதில் சிக்கல்: அண்ணா பல்கலையும் குழப்பம்:
புதிய பொறியியல் கல்லூரி துவங்க எந்த அமைப்பிடம் விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறித்து சரியான வழிகாட்டி விதிமுறைகள் வெளி வராததால் சிக்கல் உருவாகி உள்ளது. இந்த விவகாரத்தில் அண்ணா பல்கலைக்கும் எவ்வித தகவலும் தெரிவிக்கப்படாததால், பல்கலையும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது.
அதிகாரம் பறிப்பு
தொழிற் கல்வி நிறுவனங்களுக்கு துவக்க அங்கீகாரம், தொடர் அங்கீகாரம் வழங்கும் பணியை, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழு (ஏ.ஐ.சி.டி.இ.,) கவனித்து வந்தது. சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, இந்த அமைப்பிடம் இருந்த அதிகாரங்கள் பறிக்கப்பட்டு பல்கலைகழக மானிய குழுவிடம் (யு.ஜி.சி.,) வழங்கப்பட்டுள்ளன. தொழிற்கல்வி நிறுவனங்கள் தொடர்பான பணியை, இனி யு.ஜி.சி.,யே கவனிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, யு.ஜி.சி., தொழிற்கல்வி நிறுவனங்களுக்கான புதிய வரைவு விதிமுறைகளை சமீபத்தில் அதன் இணையதளத்தில் வெளியிட்டது. 12ம் தேதி வரை பல தரப்பினரிடம் இருந்தும் கருத்துக்களை கேட்டறிந்தது. இனி, அந்த கருத்துக்களை ஆய்வு செய்து அதனடிப்படையில் தேவையான மாற்றங்களை செய்து, இறுதி விதிமுறைகளை வெளியிடும். இதற்கு இன்னும் எவ்வளவு நாள் ஆகும் என தெரியவில்லை.
இந்நிலையில் புதிய பொறியியல் கல்லூரி துவங்க எந்த அமைப்பிடம் விண்ணப்பிப்பது என தெரியாமல் பலரும் தவித்து வருகின்றனர். வழக்கமாக ஏ.ஐ.சி.டி.இ.,யிடம் விண்ணப்பித்தால் டில்லியில் இருந்து ஒரு ஆய்வுக்குழுவை அங்கீகாரம் கேட்கும் கல்லூரிக்கு ஏ.ஐ.சி.டி.இ., அனுப்பி வைக்கும். இக்குழு, கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள உள்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பிக்கும்; அதனடிப்படையில் புதிய கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்கப்படும்.
பின், அண்ணா பல்கலையிடம் விண்ணப்பித்து, இணைப்பு அங்கீகாரம் பெறுவர். இதன்பிறகே, மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் புதிய கல்லூரி பெயர் சேர்க்கப்படும். ஏப்ரலில் இருந்தே புதிய கல்லூரிகளுக்கான அங்கீகாரம் வழங்கப்படும். இந்நிலையில் துவக்க அங்கீகாரம் பெற யு.ஜி.சி.,யிடம் விண்ணப்பிக்க வேண்டுமா அல்லது அண்ணா பல்கலையிடம் விண்ணப்பிக்க வேண்டுமா என, தெரியாமல், கல்லூரி துவங்குவோர் தவித்து வருகின்றனர்.
தகவல் இல்லை
இதுகுறித்து, கல்லூரி அதிபர் ஒருவர் கூறியதாவது: "ஒரே குழப்பமாக உள்ளது. முறையான விதிமுறைகள் வெளிவந்தால் தான் குழப்பங்கள் தீரும். புதிய கல்லூரி மட்டுமில்லாமல் ஏற்கனவே இயங்கி கொண்டிருக்கும் கல்லூரிகள், ஆண்டுக்கு ஒரு முறை தொடர் அங்கீகாரம் பெற வேண்டி உள்ளது.
10 ஆண்டுகளை கடந்த கல்லூரிக்கு மட்டுமே நிரந்தர அங்கீகாரம் வழங்கப்படுகிறது. அதற்கு குறைவான கல்லூரிகள் ஒவ்வொரு ஆண்டும் ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் அண்ணா பல்கலையிடம் அங்கீகாரத்தை புதுப்பிக்க விண்ணப்பிக்க வேண்டும். தற்போது, ஏ.ஐ.சி.டி.இ., அல்லது யு.ஜி.சி.,யிடம் விண்ணப்பிப்பதா என, தெரியவில்லை. அதனால், அண்ணா பல்கலையில் மட்டும் விண்ணப்பித்து வருகிறோம்." இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
அண்ணா பல்கலை வட்டாரம் கூறுகையில், "இதுவரை எங்களுக்கு எவ்வித தகவலும் வரவில்லை; அதனால், எங்களுக்கும் குழப்பமாகத் தான் உள்ளது. மாணவர் சேர்க்கைக்கு இன்னும் கால அவகாசம் இருப்பதால் அதற்குள் தெளிவான வழிகாட்டுதல் கிடைத்துவிடும்" என, தெரிவித்தது.







