இடம் பெயர்ந்தவர்களின் குழந்தைகளுக்கு சிறப்பு போலியோ சொட்டு மருந்து:
சென்னையில் வசிக்கும் இடம் பெயர்ந்தவர்களின் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, நாளை, சிறப்பு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு:
சாலையோரம் வசிப்போர், நரிக்குறவர்கள், கழைக்கூத்தாடிகள், பணி நிமித்தம் இடம் பெயர்வோர், செங்கல் சூளையில் பணிபுரிவோர், கட்டுமான தொழிலாளர்கள் என, சென்னையில் வசிக்கும் இந்த வகையை சேர்ந்தவர்கள், அடிக்கடி இடம் பெயர்ந்து கொண்டே உள்ளனர்.
அவர்களின் குழந்தைகளுக்கு முறையான தடுப்பூசிகள் போடப்படுவது இல்லை. இதனால் இந்த குழந்தைகளை அடையாளம் கண்டு ஒவ்வொரு ஆண்டும், சிறப்பு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு, சென்னையில் இடம் பெயர்ந்தவர்கள் வசிக்கும் பகுதிகளாக, 725 இடங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன.
அங்கு வசிப்போரின், ஐந்து வயக்குட்பட்ட, 1,283 குழந்தைகளுக்கு நாளை (14ம் தேதி) போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதற்காக, மாநகராட்சி சிறப்பு குழுக்களை அமைத்துள்ளது.
இவ்வாறு மாநகராட்சி அறிவித்துள்ளது.







