மேற்படிப்பிற்காக வெளியில் செல்வது என்பது, வெளிநாட்டிற்கு செல்வதுதான் என்ற அர்த்தம் எப்போதுமே இருக்க முடியாது என்பது ஒரு ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியா போன்ற பெரிய மக்கள்தொகைக் கொண்ட பரந்த நாட்டில், அது மாநிலம் விட்டு மாநிலம் செல்வதாகவோ, ஏன், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதாகவோ கூட இருக்கலாம்.
கடந்த 10 ஆண்டுகளில் மட்டும், மொத்தம் 37 லட்சம் மாணவர்கள் உள்நாட்டிற்குள்ளேயே, படிப்பிற்காக இடம் பெயர்ந்துள்ளனர். கல்விக்காக இடம்பெயரும் ஆர்வம், பெண்களோடு ஒப்பிடுகையில் ஆண்களுக்கு மிகவும் அதிகம்.
இந்த விஷயத்தில் ஆண்களின் எண்ணிக்கை 26 லட்சமாகவும், பெண்களின் எண்ணிக்கை 11 லட்சமாகவும் உள்ளது. 6.2 லட்சம்(17%) மாணவர்கள், கல்விக்காக வெளி மாநிலத்திற்கும், 16.8 லட்சம் பேர் வெளி மாவட்டத்திற்கும், தங்களின் சொந்த நாட்டிற்குள், கடந்த 10 ஆண்டுகளில் இடம் பெயர்ந்துள்ளனர்.
உள்நாட்டில் மக்கள் வளமான வாழ்க்கையின் பொருட்டு இடம் பெயர்வது சாதாரண விஷயம்தான். ஆனால், கல்வியின் பொருட்டு அதிகளவில் இடம்பெயர்வது கவனிக்கத்தக்கது. எனவே இந்த வகையில், சில மாநிலங்கள் அதிக மாணவர்களை ஈர்ப்பதாயும், சில மாநிலங்கள் தங்களின் மாணவர்களை, அதிகளவில் இழப்பதாயும் இருப்பதை தவிர்க்க முடியாது.
ஏனெனில் அனைத்து மாநிலங்களும், கல்வி வசதிகளிலும், அதற்கான கட்டமைப்புகளிலும் சமஅளவு முன்னேற்றத்தை உடையவை அல்ல. இவ்வாறு அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.