சட்டசபையில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்துக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா பதில் அளித்து பேசினார். அப்போது, ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்படும் என்று அறிவித்தார். இதன்மூலம், எஸ்.சி.,எஸ்.டி, பி.சி., எம்.பி.சி. மற்றும் சிறுபான்மையின மாணவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள். 2013 ஆகஸ்ட் மாதம் தேர்வு எழுதியவர்களுக்கும் இந்த சலுகை உண்டு என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
டி.இ.டி., தேர்வானது, மொத்தம் 150
மதிப்பெண்களுக்கு நடத்தப்படுவதாகும். இதில் முதல் தாள் மற்றும் இரண்டாம்
தாள் என இரண்டு பிரிவுகள் உண்டு. தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு முதல்
தாளும், உயர்நிலைக் கல்வி ஆசிரியர்களுக்கு இரண்டாம் தாளும் அடங்குபவை.
இந்த 2 தேர்வுகளிலுமே, சம்பந்தப்பட்ட
தேர்வர்கள், குறைந்தபட்சம் 90 மதிப்பெண்கள்(60%) பெற்றால்தான் தேர்ச்சி
பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என்ற நிலை இருந்தது. இடஒதுக்கீட்டுப்
பிரிவினருக்கு எந்தவொரு மதிப்பெண் சலுகையும் வழங்கப்படவில்லை. இதனால்
பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புகளும், விமர்சனங்களும் எழுந்தன.
கடும் எதிர்ப்புகளையடுத்து, தற்போது,
பொதுப்பிரிவை தவிர்த்த இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5% மதிப்பெண் சலுகை
வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.







