என் குழந்தை
இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதுதான் எல்லா பெற்றோருடைய கனவும். ஆனால்,
கனவு நனவாவது, குடும்ப பொருளாதாரத்தை சார்ந்ததாகி விடுகிறது என்பது
துரதிருஷ்டமான விஷயம். கட்டாய கல்வி கொண்டுவரப்பட்ட பிறகும், கல்வி கற்கும்
வயதில் குடும்பத்துக்கு உழைக்கும் பிஞ்சுகள் இன்னமும் இருப்பது
வேதனைக்குரிய விஷயம் சமீபத்தில், பட்டாசு ஆலை விபத்து, இழப்பீடு தொடர்பான
ஒரு வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை, எக்காரணம் கொண்டும் பட்டாசு
ஆலைகளில் குழந்தை தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தக்கூடாது என
உத்தரவிட்டுள்ளது. குழந்தை தொழிலாளர் பிரச்னை நாட்டுக்கு ஒரு சவாலாகவே
இருக்கிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் 2ம் இடத்தில் உள்ள தமிழகமும்
இதற்கு விதிவிலக்கல்ல.
இந்த மாநிலத்தில்
கல்வியறிவு பெற்றவர்கள் 73.45 சதவீதம். பள்ளி செல்லா குழந்தைகள்
எண்ணிக்கையும் மிக குறைவு. இருந்தாலும் செங்கல் சூளை, பீடி சுற்றுதல்,
பட்டாசு ஆலை, கைத்தறி, ஜவுளி தொழில்கள் மற்றும் டீக்கடைகளில் குழந்தை
தொழிலாளர்கள் இருப்பதை யாரால் மறுக்க முடியும்? வெளிமாநில சிறுவர்கள் இங்கு
வேலைக்கு வருவதுபோல், இங்குள்ள சிறுவர்கள் பலர் வெளிமாநிலங்களுக்கு
வேலைக்கு அனுப்பப்படுகின்றனர் என்கிறது தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு
ஆணைய அறிக்கை.
குழந்தை தொழிலாளர் பிரச்னை
பற்றி ஆய்வு செய்த குருபாதசாமி கமிட்டி, �வறுமை நிலை நீடிக்கும் வரை
குழந்தை தொழிலாளர் முறையை தடுப்பது கடினம். சட்டம் இயற்றுவதன் மூலம்
பிரச்னையை தீர்க்க நினைப்பது நடைமுறைக்கு ஒத்துவரும் யோசனை அல்ல� என்று
கருத்து கூறியுள்ளது.
இத்தகைய
சூழ்நிலையில், உடல் நலத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய தொழில்களில்
குழந்தை தொழிலாளர் முறையை தடை செய்வதோடு, மற்ற இடங்களில் கட்டுப்பாடுகளை
விதித்து இந்த பிரச்னையை கையாள வேண்டும் என பரிந்துரைத்தது. இதன்படி 1986ல்
குழந்தை தொழிலாளர் சட்டமும் இயற்றப்பட்டது. ஆபத்தான வேலையில் குழந்தைகளை
ஈடுபடுத்த கூடாது என்கிறது இந்த சட்டம். இப்படி ஆபத்தான வேலை செய்யும்
குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு மறு வாழ்வு அளிக்க குழந்தை தொழிலாளர் தேசிய
கொள்கையும் உருவாக்கப்பட்டது.
இதையெல்லாம்
மனதில் வைத்துக்கொண்டு குழந்தை தொழிலாளர்களை மீட்டாலும் பட்டாசு, செங்கல்
சூளை போன்ற இடங்களில் ஏக்க கனவுகளுடன் பிஞ்சுகள் வெந்து போவது தொடர்ந்து
கொண்டுதான் இருக்கிறது. கமிட்டி கூறியதுபோல, வறுமை நிலை நீடிக்கும் வரை
இந்த அவலம் தொடரும் என்றால், தொழிற்துறை வளர்ச்சியோடு பொருளாதார சமநிலையை
ஏற்படுத்துவது அரசுகளின் தலையாய கடமை.







