"அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவியருக்கும், கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இதனால், அரசுக்கு கூடுதலாக, ஆண்டுக்கு, 3.41 கோடி ரூபாய் செலவாகும்" என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
சட்டசபையில், அவர் கூறியதாவது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் குணசேகரன் பேசும் போது, "அரசு செவிலியர் பயிற்சி பள்ளிகளில், பட்டயப்படிப்பு படிக்கும், 1,400 பேரில், 600 பேருக்கு தான், கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. மற்றவர்களுக்கும், உதவித்தொகை வழங்க வேண்டும்" என்றார்.
அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளிகளில் படிக்கும், மாணவியர் அனைவருக்கும், கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் பல ஆண்டுகளாக, செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனினும், மாணவியர் சேர்க்கை உயர்த்தப்பட்டதற்கு ஏற்ப கல்வி உதவித் தொகை வழங்கும், மாணவியரின் எண்ணிக்கை உயர்த்தப்படவில்லை.
தற்போது, 23 அரசு செவிலியர் பள்ளிகளில், ஒவ்வொரு ஆண்டும், 2,000 மாணவியர் சேர்க்கப்பட்டு, பட்டயப் படிப்பு படிக்கின்றனர். வரும் கல்வியாண்டு முதல், அரசு செவிலியர் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவியருக்கும், கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இதனால், அரசுக்கு கூடுதலாக, ஆண்டுக்கு 3.41 கோடி ரூபாய், செலவு ஏற்படும். இவ்வாறு, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.







