சி.பி.எஸ்.இ.,
(மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்), 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழக
மாணவர்கள், 99.94 சதவீதம் பேர், தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர்.தேர்வு
முடிவு, நேற்று முன்தினம் மாலை, சி.பி.எஸ்.இ., இணைய தளத்தில்
வெளியிடப்பட்டது. தேர்ச்சி சதவீத நிலவரம் குறித்து, சி.பி.எஸ்.இ., சென்னை
மண்டல அலுவலர், சுதர்சன் ராவ், நேற்று,நிருபர்களிடம்
கூறியதாவது:
தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, அந்தமான், டாமன் டையூ,
மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள், சென்னை மண்டலத்தில் உள்ளன. மண்டலம் முழுவதும்
உள்ள, 1,800 பள்ளிகளில் இருந்து, 1.23 லட்சம் மாணவ, மாணவியர், 10ம்
வகுப்பு தேர்வை எழுதினர். இதில், 1.22 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
மொத்த தேர்ச்சி சதவீதம், 99.58. கடந்த ஆண்டை விட, தேர்ச்சி சதவீதம்
மிகச்சிறிய அளவிற்கு கூடியுள்ளது. தமிழக நிலவரம்: தமிழகத்தை பொறுத்தவரை,
406 பள்ளிகளில் இருந்து, 28,589 பேர், தேர்வை எழுதியதில், 28,572 பேர்
தேர்ச்சி பெற்றனர். 99.94 சதவீத மாணவர்கள், தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த
ஆண்டு, இணையதளம் வழியாக, விடைத்தாள் திருத்தப்பட்டன. இந்த புதிய திட்டம்,
கடந்த ஆண்டு, டில்லி மண்டலத்தில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த
ஆண்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து மண்டலங்களிலும் அமல்படுத்தப்பட்டன.
கம்ப்யூட்டர் வழியில், விடைத்தாள் திருத்தும் முறை, மிகவும்
வெளிப்படைத்தன்மை வாய்ந்ததாக உள்ளது. புதுச்சேரியில், 964 பேர் தேர்வெழுதி,
அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவ்வாறு, ராவ் தெரிவித்தார்.பிளஸ் 2
'ரிசல்ட்' எப்போது சுதர்சன் ராவ் கூறியதாவது:சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு
முடிவு, 25, 26 ஆகிய தேதிகளில், ஏதாவது ஒரு நாளில் வெளியாக வாய்ப்பு
உள்ளது. கடந்த ஆண்டு, 26ம் தேதி வெளியானது. 'தேர்வு முடிவுகள், விரைவில்
வெளியிடப்படும்' என, அண்ணா பல்கலைக்கு, சி.பி.எஸ்.இ., கடிதம் எழுதி உள்ளது.
சி.பி.எஸ்.இ., மாணவர்கள் பலர், பி.இ., படிப்பில் சேர விண்ணப்பித்து
உள்ளனர். அதை கருத்தில்கொண்டு, அண்ணா பல்கலைக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டு
உள்ளது, என்றார்







