பொதுப் பிரிவு கலந்தாய்வு மறு தேதியை வரும் 30-ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகம் நிர்ணயம் செய்துகொள்ள ஏஐசிடிஇ அனுமதி அளித்துள்ளது.இந்த அனுமதியைத் தொடர்ந்து கலந்தாய்வு மறு தேதி நிர்ணயம் செய்யும்
பணியைத் தொழில்நுட்ப கல்வி இயக்கநரகம் தீவிரப்படுத்தியுள்ளது. சனிக்கிழமை
(ஜூன் 28) அல்லது திங்கள்கிழமை நடைபெற உள்ள கலந்தாய்வு ஒருங்கிணைப்புக்
குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டு, மறு தேதி அறிவிப்பும்
வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சிலிடம் (ஏஐசிடிஇ) நிலுவையில்
உள்ள பொறியியல் கல்லூரி விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்ய ஒரு வாரம் கால
அவகாசத்தை அளித்து உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை (ஜூன் 27) தீர்ப்பளித்தது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை தொடங்கவிருந்த பொதுப் பிரிவு
கலந்தாய்வை, தேதி குறிப்பிடாமல் அண்ணா பல்கலைக்கழகம் ஒத்தி வைத்தது.
இதனால் கடும் பாதிப்புக்கு ஆளான, மாணவர்களும் பெற்றோரும், கலந்தாய்வு
மறு தேதி எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்த நிலையில் ஏஐசிடிஇ அனுமதி அளித்த உடன்தான், பொதுப் பிரிவு
கலந்தாய்வு தேதி குறித்து முடிவை எடுக்க முடியும் என அண்ணா பல்கலைக்கழகம்
தெரிவித்தது.
இது குறித்து, ஏஐசிடிஇ தலைவர் மான்தா தொலைபேசி மூலம் "தினமணி'க்கு அளித்த பேட்டி:
அனுமதி நீட்டிப்பு மற்றும் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதற்கு என
நாடு முழுவதிலுமிருந்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தன.
இவற்றில் பெரும்பாலான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, முடிவுகளும்
தெரிவிக்கப்பட்டுவிட்டன.
இப்போது ஏஐசிடிஇ சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது
ஏற்கெனவே இயங்கி வரும் 100 பொறியியல் கல்லூரிகளின் விண்ணப்பங்கள் மட்டுமே
நிலுவையில் உள்ளன. இவற்றில் தமிழகத்தைச் சேர்ந்த 15 பொறியியல் கல்லூரிகளின்
விண்ணப்பங்களும் அடங்கும்.
இந்த விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன. இந்தப் பணிகள் அனைத்தும் வரும் திங்கள்கிழமைக்குள்
முடிக்கப்பட்டு விடும்.
எனவே, பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வு மறு தேதியை திங்கள்கிழமையன்றே
(ஜூன் 30) இறுதி செய்து கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஏஐசிடிஇ
சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுவிட்டது.
தமிழகத்தின் 20 கல்லூரிகளுக்கு அனுமதி அளிப்பதன் மூலம், 6 ஆயிரம்
கூடுதல் பொறியியல் இடங்கள் தமிழகத்தில் உருவாக வாய்ப்புள்ளது என்றார் அவர்.
இது குறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குநர் குமார் ஜெயந்த் ஆகியோர் கூறியது:
கலந்தாய்வு மறு தேதியை நிர்ணயம் செய்துகொள்ள ஏஐசிடிஇ அனுமதி
அளித்துள்ளது. இதற்காக சனிக்கிழமை அல்லது திங்கள்கிழமை கலந்தாய்வு
ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் கூட்டப்படும்.
அந்தக் கூட்டத்தில் மறு தேதி குறித்த இறுதி முதிவு எடுக்கப்பட்டு, உடனடியாக அறிவிப்பு வெளியிடப்படும் என்றனர்.








