"அனைத்து தனியார் பள்ளிகளிலும் தமிழ் வழிக்கல்வியை அரசு கட்டாயமாக்க வேண்டும்" என குமரி அனந்தன் வலியுறுத்தினார்.தமிழ் மொழி வழிக்கல்வியை வலியுறுத்தி ஈரோட்டில் உண்ணாவிரத
போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி
அனந்தன் கூறியதாவது: தற்போதய அரசு மழலையர் பள்ளிகளிலும் ஆங்கில
வழிக்கல்வியை கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு தமிழ்த்தாயின்
பிள்ளைகள் அனைவரும் கடும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.
தாய், தான் பெற்ற பிள்ளையை தாலாட்டி, சீராட்டி மரபு ரீதியாக
தங்கள் குழந்தைகளை வளர்ப்பதை போல், தமிழ் ஆர்வலர்கள் தாய் மொழியான தமிழை
காப்பாற்ற முயற்சி செய்ய வேண்டும். அரசு பள்ளி மட்டுமின்றி அனைத்து தனியார்
பள்ளிகளிலும் தமிழ் வழிக்கல்வியை கட்டாயமாக்க அரசு ஆணை பிறப்பிக்க
வேண்டும்.
ஆங்கிலம் உள்ளிட்ட எந்த மொழியையும், தமிழ் வழியாகவே
கற்பிக்க வேண்டும். தமிழ்மொழியை முழுவதும் கற்றவர்களுக்கே, மற்ற மொழியை
கற்பது எளிதாக இருக்கும். தமிழ் மொழி வழியில் படித்த பலர் இந்திய
ஆட்சியாளருக்கான தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.
உலகின் மூத்த மொழியாக மொழியியல் ஆய்வாளர்களால்
அறிவிக்கப்பட்டுள்ள மொழி தமிழ். ஆபிரகாம் பண்டிதர் போன்ற மேல்நாட்டு
கவிஞர்கள், தமிழ்மொழியின் பெருமையை பறைசாற்றினர்.
ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்ததில் ஜப்பான் மொழியில் 500
தமிழ் வார்த்தைகளும், கிரேக்கம் மற்றும் லத்தீன் மொழியில் தலா 1,000
வார்த்தைகள் வரை தமிழ் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளன.
கடந்த 1965ல் காமராஜர் முதல்வராக இருந்த போது கோவையில்
நடந்த தமிழ் வளர்ச்சி குறித்த மாநாட்டில் பூலோகம், விஞ்ஞான, வரலாறு ரீதியாக
தமிழ்மொழியின் மேன்மை குறித்து அறிஞர்கள் நிரூபணம் செய்தனர்.
ஈரோட்டை தொடர்ந்து, கோவை, திருச்சி ஆகிய நகரங்களிலும்,
தமிழ்வழிக் கல்வியை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்த
திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.







