புதுவையில் நடப்பு கல்வியாண்டில் சிபிஎஸ்இ
பாடத்திட்டத்தை கல்வித்துறை அமல்படுத்தி உள்ளது. 187 அரசு பள்ளிகளிலும்
முதல் வகுப்பில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கனவே
ஆங்கில தொடக்கப்பள்ளியாக செயல்பட்ட 50 பள்ளிகளில் 2 முதல் 5ம் வகுப்பு
வரையிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமலுக்கு வந்துள்ளன.
இதற்கு
பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தமிழை மட்டுமின்றி பிற
மொழிகளையும் புதுவை ஏழை மாணவர்கள் கற்பதில் என்ன தவறு? என்று முதல்வர்
ரங்கசாமி பதிலடி கொடுத்தார். மேலும் சிபிஎஸ்இக்கு எதிர்கட்சியான
காங்கிரசும், மத்திய ஆளும் கட்சியான பாஜகவும் ஆதரவு தெரிவித்துள்ளதால்
இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் மாநில அரசு உறுதியாக உள்ளது.
அடுத்த
கல்வியாண்டு முதல் இத்திட்டம் அரசு நிதியுதவி பள்ளிகளிலும்
விரிவுபடுத்தப்படும் என்று தெரிகிறது. இதற்கிடையே சிபிஎஸ்இ
பாடத்திட்டத்திற்கான புத்தகங்கள் பெங்களூரில் இருந்து தற்போது புதுச்சேரி
கொண்டு வரப்பட்டுள்ளது. அவை கல்வித்துறை, சாரம், அன்னை சிவகாமி பள்ளி
குடோன்களில் வைக்கப்பட்டுள்ளன.
அங்கிருந்து
கடந்த 2 நாட்களாக அரசு பள்ளிகளுக்கு சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இன்று
முதல் அந்தந்த பள்ளிகளில் மாணவ& மாணவிகளுக்கு சிபிஎஸ்இ பாட புத்தகங்கள்
விநியோகிக்கப்படுகின்றன. ஏற்கனவே 2 வாரங்களுக்கு முன் ஆசிரியர்களுக்கு
இப்புத்தகங்கள் வழங்கப்பட்டு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர
சீருடை வழங்கப்படாத பள்ளிகளுக்கு ஓரிரு வாரங்களில் அவற்றை விநியோகிக்கவும்
கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.







