ஐ.ஏ.எஸ்., -
ஐ.பி.எஸ்., அதிகாரி களை தேர்வு செய்வதற்கான, சிவில் சர்வீசஸ் தேர்வின்,
சிசாட் கேள்வித்தாளில் இடம் பெற்றுள்ள ஆங்கில பகுதி மதிப்பெண், ஒட்டுமொத்த
மதிப்பெண்ணில் சேர்க்கப்பட மாட்டாது என, மத்திய அரசு திருத்தம் கொண்டு
வந்துள்ள நிலையில், அதையும் ஏற்றுக் கொள்ளாத தேர்வர்கள், சிசாட் தேர்வையே
ரத்து செய்ய வேண்டும் என கோரி, நேற்றும் தொடர்ந்து போராட்டத்தில்
ஈடுபட்டனர்.
கடந்த, 26 நாட்களாக நடைபெற்று வரும் அந்த
போராட்டத்திற்கு, நேற்று அரசியல் சாயம் பூசப்பட்டது. ஆம் ஆத்மி கட்சியின்
முன்னாள் முக்கிய தலைவர்களில் ஒருவரான, யோகேந்திர யாதவ், மாணவர்களுடன்
இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு, சிசாட் தேர்வையே ரத்து செய்ய வேண்டும் என
வலியுறுத்தினார். சிவில் சர்வீசஸ் தேர்வில் 2011ல் தான், சிசாட்
கேள்வித்தாள் சேர்க்கப்பட்டது.







