அரசு பல்நோக்கு
மருத்துவமனையில், 100 எம்.பி.பி.எஸ்., இடங்களுடன், புதிய மருத்துவக்
கல்லூரி அமைகிறது. இது, அடுத்த ஆண்டு முதல், செயல்பாட்டுக்கு வரும் வகையில்
பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.பல்நோக்கு
மருத்துவமனை : சென்னை, ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில், கடந்த, தி.மு.க.,
ஆட்சிக் காலத்தில், பிரமாண்டமாக, புதிய தலைமைச் செயலக கட்டடம்
கட்டப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், இந்த கட்டடம், அரசு
பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்படும் என, அரசு அறிவித்தது. இதன்படி, அரசு
பல்நோக்கு மருத்துவமனை, பிப்., 22ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்தது.
பிற இடங்களில் இருந்து, மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படுவோருக்கு
சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பல்நோக்கு
மருத்துவமனையில், மருத்துவக் கல்லூரி உருவாக்கப்படும் என, அரசு அறிவித்தது.
அதற்கேற்ப, 200 கோடி ரூபாயில், மருத்துவக் கல்லூரிக்கான கட்டடங்கள்
கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பணிகள், ஆறு மாதங்களில்
முடிவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில்,
அடுத்த கல்வியாண்டு முதல், மருத்துவக் கல்லூரி செயல்பாட்டுக்கு வரும் என,
அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகளைத் துவங்கும் வகையில், சென்னை அரசு
பொது மருத்துவமனை டீன் விமலா, பொறுப்பு அதிகாரியாக (நோடல் ஆபீசர்)
நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து,
மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது: ஓமந்தூரார் தோட்ட
வளாகத்தில், அரசு பல்நோக்கு மருத்துவமனையை ஒட்டி, புதிய மருத்துவக் கல்லூரி
கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. பணிகள் முடிந்து, 100
எம்.பி.பி.எஸ்., இடங்களுடன், அடுத்த கல்வியாண்டு முதல் செயல்பாட்டுக்கு
வரும்.
முறையான அனுமதி :
பொறுப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு, அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன. இந்திய மருத்துவக் கவுன்சிலிடம், முறையான அனுமதி பெறுவதற்கான
ஆரம்ப கட்ட முயற்சிகளும் நடந்து வருகின்றன. தமிழகத்தின், 20வது அரசு
மருத்துவக் கல்லூரியாக இது இருக்கும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.







