தகுதிகாண் மதிப்பெண்
முறைக்கு (வெயிட்டேஜ் மதிப்பெண்) எதிர்ப்புத் தெரிவித்து தகுதிச்
சான்றிதழ்களை ஒப்படைக்கும் போராட்டத்தில் பட்டதாரி ஆசிரியர்கள்
திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
ஆசிரியர்
நியமனத்தில் தகுதிகாண் மதிப்பெண் முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து,
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் தொடர்ந்து
பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில்,
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ்களை
இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு
வாரியம் அறிவித்திருந்தது.
இந்தச் சான்றிதழால்
தங்களுக்குப் பயனில்லை எனக் கூறி, அதை ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில்
திருப்பி ஒப்படைப்பதற்காக பட்டதாரி ஆசிரியர்கள் சென்னை கல்லூரி சாலையில்
உள்ள பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலக வளாகத்தில் கூடினர்.
ஆனால், ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்துக்குள் செல்ல போலீஸார் அவர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை.
இதையடுத்து, அவர்களின் பிரதிநிதிகள் மட்டும் சென்று ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் கோரிக்கை மனுவை வழங்கினர்.
அதன்பிறகும், இந்தப் போராட்டத்தைத் தொடர முயன்றபோது போலீஸார் அவர்களை கைது செய்தனர். சற்றுநேரத்தில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.







