அவிநாசி அருகே
பைபாஸ் ரோட்டில் பறக்கும் வாகனங்களுக்கு மத்தியில், கேட்பாரற்று கிடந்த
முதியவருக்கு, ஆதரவுக்கரம் நீட்டிய அரசு ஊழியரை அனைவரும் நெகிழ்ச்சியுடன்
பாராட்டினர். அவிநாசி
- மங்கலம் ரோடு வழியாக, ஆறு வழிச்சாலை (பைபாஸ் ரோடு) ஓரத்தில்,
முகத்தையும், கண்களையும் மறைத்த வண்ணம், முடியோடு ஒரு முதியவர், கடந்த சில
நாட்களாக தஞ்சம் புகுந்துள்ளார்.அவரை பார்த்தும், பார்க்காத மாதிரி பலரும் சென்று
கொண்டிருந்தபோது, மனிதநேயமிக்க ஒருவர், பெரியவருக்கு உணவு வாங்கிக்
கொடுத்து, தலைமுடியை திருத்தம் செய்து, முகத்துக்கு ஷேவிங் செய்து,
புத்துணர்ச்சி ஊட்டினார்.பெரியவருக்கு முடி திருத்தம் செய்த அவரது பெயர்
ராமசாமி என்பதும், திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில், இடைநிலை
கட்டளைதாரராக பணியாற்றும் அரசு ஊழியர் என்பதும் தெரிய வந்தது. இதையறிந்த
பொதுமக்கள், ராமசாமியின் மனித நேயமிக்க சேவையை பாராட்டிச் சென்றனர்.
ராமசாமி கூறுகையில்,
''திருப்பூருக்கு வேலைக்கு (கோர்ட்) செல்லும்போது, சாலை யின் இருபுறமும்
உள்ள ஆதரவற்றோரை கவனிப்பேன். விடுமுறை நாட்களில், அந்நபர்களை
தேடிப்பிடித்து, முடிதிருத்தம், முக சவரம் செய்து விடுவேன். தேவைக்கேற்ற
உணவு வாங்கிக் கொடுப்பேன். ஏதோ, என்னால் முடிந்த உதவியை மனதார செய்து
வருகிறேன்,'' என்றார்.








