மருத்துவப்
படிப்பில், நிர்வாக ஒதுக்கீட்டில் மாணவர்களைச் சேர்க்க, தடை விதிக்கக்
கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுவுக்கு பதிலளிக்கும்படி, அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப,
உத்தரவிடப்பட்டுள்ளது.சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர், ஜி.விஜயகுமார், தாக்கல் செய்த மனு:
தனியார் மருத்துவக்
கல்லூரிகளில், 65 சதவீத இடங்கள், கவுன்சிலிங் மூலமும்; மீதி, 35 சதவீத
இடங்கள், நிர்வாக ஒதுக்கீடு மூலமும், நிரப்பப்படுகின்றன.
நிர்வாக
ஒதுக்கீட்டுக்கான இடங்களை, வெளிப்படைத்தன்மை இல்லாமல், மறைமுகமாக, நியாயமான
நடைமுறைகளை பின்பற்றாமல், தனியார் கல்லூரிகள் நிரப்புகின்றன. வெளிப்படையான
கவுன்சிலிங் மூலம், நிர்வாக ஒதுக்கீட்டுக்கான இடங்களை நிரப்புவதே சரியாக
இருக்கும்.
பட்டியல் : இந்த
கல்வியாண்டுக்காக, மாணவர்கள் சேர்க்கையை ஒழுங்குபடுத்தும் குழுவின் தனி
அதிகாரி மற்றும் தனியார் கல்லூரிகள் சங்கத்தின் செயலர், தயாரித்து
வெளியிட்டுள்ள, விளக்க குறிப்பேட்டில், கல்விக் கட்டணம் பற்றி
கூறப்படவில்லை. விளக்க குறிப்பேட்டில் பட்டியலிடப்பட்டுள்ள, ஆறு தனியார்
மருத்துவக் கல்லூரிகளில், மாணவர்களை சேர்க்க, இந்திய மருத்துவ கவுன்சில்
தடை விதித்துள்ளது. இந்த முக்கிய தகவலை வெளியிடாததால், மாணவர்கள் பலர், தடை
செய்யப்பட்ட கல்லூரிகளைத் தேர்ந்தெடுத்திருப்பர். இந்த கல்வியாண்டுக்கு
வெளியிடப்பட்ட விளக்க குறிப்பேட்டில், தடை செய்யப்பட்ட கல்லூரிகள் இடம்
பெற்றது குறித்து, விளக்கம் அளிக்கப்பட வேண்டும்.
வழிமுறைகள் :
நிர்வாக ஒதுக்கீட்டில், மருத்துவப் படிப்புக்கு மாணவர்களை சேர்ப்பதற்கு,
வழிமுறைகளை வகுக்க வேண்டும். இந்த கல்வியாண்டுக்கான விளக்க குறிப்பேட்டின்
அடிப்படையில், நிர்வாக ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்க, தடை விதிக்க
வேண்டும்.
புதிய விளக்க
குறிப்பேட்டை வெளியிட்டு, தகுதி அடிப்படையில், வெளிப்படையாக, நிர்வாக
ஒதுக்கீட்டில், மாணவர்களை சேர்ப்பதை, உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு,
மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி
சத்தியநாராயணன் அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. அரசு
தரப்பில் பதிலளிக்க, அரசு பிளீடர் மூர்த்தி, 'நோட்டீஸ்' பெற்றுக் கொண்டார்.
விசாரணையை, வரும், 17ம் தேதிக்கு, 'முதல் பெஞ்ச்' தள்ளிவைத்தது.







