
தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும்
பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவருடைய
கவித்திறனை மெச்சி பாரதி என்ற பட்டம் எட்டப்ப நாயக்கர் மன்னரால்
எட்டயபுரம் அரசசபையால் வழங்கப்பட்டது.
சுவாமி விவேகானந்தரின் சிஷ்யையான சகோதரி நிவேதிதையை இவர் தமது குருவாக
கருதினார்.கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி - பாரதி.
நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் - பாரதி
தம் தாய்மொழியாம் தமிழின்மீது அளவுகடந்த அன்புகொண்டவர். பன்மொழிப்
புலமைபெற்ற பாவலரான இவர் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ
தெங்கும் காணோம்" என கவிபுனைந்த கவிஞாயிறு. சமற்கிருதம், வங்காளம், இந்தி,
பிரான்சியம், ஆங்கிலத்தில் தனிப்புலமை பெற்றவர். அம்மொழிகளின்
தனிச்சிறப்புமிக்க படைப்புகளைத் தமிழ் மொழியாக்கம் செய்தவர். பழந்தமிழ்க்
காவியங்களின்மீது தனி ஈடுபாடு கொண்டவர். அழகியல் உணர்வும் தத்துவ
சிந்தனைகளும் ஒருங்கே கொண்டவர் என்று அறியப்படுகின்றார். தேசிய கவி என்ற
முறையிலும் உலகு தழுவிய சிந்தனைகளை அழகியலுடனும் உண்மையுடனும்
கவின்றதினாலும், இவர் உலகின் சிறந்த கவிஞர்களுடன் ஒப்பிடப்படும் சிறப்பு
பெற்றவர் என்றும் அண்மைக்கால தமிழின் தன்னிகரற்ற கவியேறு என்றும் பலர்
கருதுகின்றனர். விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு
கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால் பாரதி தேசிய கவியாக
போற்றப்படுகிறார். மண்ணும் இமயமலை எங்கள் மலையே... மாநிலமீதிதுபோல்
பிறிதிலையே... இன்னறு நீர்க்கங்கை ஆறெங்கள் ஆறே... இங்கிதன் மாண்பிற்கெதிர்
எது வேறே என்று எழுதியவர்.
தன்னுடைய தாய்நாட்டை நினைந்து பெருமைகொண்டதோடு மட்டுமன்றி அதன் எதிர்காலம்
எவ்வாறிருக்கவேண்டும் என்ற பார்வையும் பெற்றவர். "வந்தேமாதரம் என்போம்
எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்" என்றவர், பள்ளித்தலமனைத்தும்
கோயில் செய்குவோம் என்றார். வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து
நாடுகளில் பயிர்செய்யும் நதிநீர் இணைப்புத் திட்டத்தை விடுதலைக்கு முன்பே
கனவுகண்டவர்.
ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் - என்று
விடுதலைக்கு முன்பாகவே பாடிக்களித்த பாரதி, தேச விடுதலைக்கு முன்பாகவே
உயிர்நீத்தவர்.தமிழ்நாடு அரசு மகாகவி பாரதியார் நினைவினைப் போற்றும்
வகையில் பாரதியார் நினைவுச் சின்னங்களாக எட்டயபுரத்தில் அவர் வாழ்ந்த
இல்லம் நினைவு இல்லமாகவும், சென்னை திருவல்லிக்கேணியில் அவர் வாழ்ந்த
இல்லம் நினைவு இல்லமாகவும், புதுச்சேரியில் அவர் வாழ்ந்த இல்லம் நினைவு
இல்லமாகவும் கொண்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில்
பாரதி மணிமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மைய மண்டபத்தில் மகாகவி
பாரதியின் ஏழு அடி உயர திருவுருவச்சிலை அமைக்கப்பட்டு 13-02-2000 அன்று
பஞ்சாப் மாநில முதல்வர் தர்பாராசிங் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 29
சதுர அடி பரப்பளவில் 1001 நபர்கள் அமரக்கூடிய அளவில் திறந்தவெளிக்
கலையரங்கம் உள்ளது. இங்கு பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக்
கண்காட்சியும் வைக்கப்பட்டுள்ளது.