தமிழ் நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும்
கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்ற கோரிக்கையை இரண்டு மாதத்தில்
பரிசீலிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது
சமீப
காலமாக பள்ளி வளாகத்தில் கொலை போன்ற வன்முறை சம்பவங்கள் நடப்பது
அதிகரித்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை பிராட்வேயில் உள்ள ஒரு
பள்ளியில் ஆசிரியையை மாணவன் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியது கிருஷ்ணகிரியில் ஆசிரியரால் மாணவி ஒருவர் பாலியல் கொடுமைக்கு
ஆளான சம்பவம் நடந்துள்ளது.
இதுபோல ஏராளமான சம்பவங்கள் தமிழகம் முழுவதும் நடந்துள்ளது.
இதுபோன்ற
குற்றச் சம்பவங்களை தடுக்க தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில்
கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பி
வைத்தேன் . அந்த மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே
என்னுடைய மனுவை பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த
மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை
நீதிபதி கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் விசாரித்து மனுதாரரின்
கோரிக்கையை இரண்டு மாதத்துக்குள் பரிசீலித்து தகுந்த உத்தரவை
பிறப்பிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, மனுவை பைசல் செய்தனர்.