மார்ச் மாதம் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள பிளஸ் 2 பொதுத் தேர்வை சென்னை
மாவட்டத்தில் மட்டும் 53 ஆயிரத்து 400 மாணவர்கள் எழுதவுள்ளனர் என்று மாவட்ட
ஆட்சியர் எ. சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.பிளஸ்
2 பொதுத் தேர்வு, 10-ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான முன்னேற்பாடு பணிகள்
குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை
நடைபெற்றது. இதில் தேர்வு மையங்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்தல்,
மாணவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தித் தருதல், தேர்வு நேரத்தில்
தடையில்லா மின்சாரம் வழங்குதல் போன்ற பல்வேறு பணிகள் குறித்து ஆலோசனை
செய்யப்பட்டது.
அப்போது இந்தாண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வை சென்னை
மாவட்டத்தை சேர்ந்த 24 ஆயிரத்து 653 மாணவர்களும், 28 ஆயிரத்து 747
மாணவிகளும் எழுதவுள்ளனர். 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 27 ஆயிரத்து 835
மாணவர்களும், 29 ஆயிரத்து 524 மாணவிகளும் எழுதுகின்றனர் என்று ஆட்சியர்
தெரிவித்தார்.
பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் 5-ஆம் தேதியும்,
10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 19-ஆம் தேதியும் தொடங்குகின்றன
என்பது குறிப்பிடத்தக்கது.