மகாத்மா காந்தி தேசிய ஊரக
வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தில் (100 நாள் வேலைத் திட்டம்)
நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க பணியாளர்கள் தங்களது ஆதார் அட்டையையும்
இணைப்பது வரும் ஏப்ரல் முதல் தேதி முதல் கட்டாயமாக்கப்பட உள்ளது.
ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 100 நாள்கள் வேலை உறுதி
எனும் அடிப்படையில் மத்திய அரசால் 2005-ஆம் ஆண்டில் இந்தத் திட்டம் நாடு
முழுவதும் செயல்படுத்தப்பட்டது.மத்திய அரசின் நிதியுதவியில், மாநில அரசுகளின் மேற்பார்வையில் இந்தத் திட்டம் நடைபெறுகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் கிராமத்தில் உள்ள சாலைகளைச்
சீரமைப்பது, குளம் தூர் வாருதல், மழைநீர் வடிகால் சீரமைத்தல், ஏரி தூர்
வாருதல், கால்வாய் வெட்டுதல், பாசனக் கால்வாய் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு
பணிகள் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மக்களைக் கொண்டே செயல்படுகின்றன.
இந்தத் திட்டம் தொடங்கப்பட்டபோது, மனித சக்தியைப்
பயன்படுத்தாமல் இயந்திர சக்தியைப் பயன்படுத்தி பணிகள்
மேற்கொள்ளப்பட்டதாகவும், போலியான தொழிலாளர் பட்டியலை உருவாக்கி நிதி
முறைகேடுகள் செய்யப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, இந்தத் திட்டத்தில் பயனாளிகள் விவரம்
முழுமையாகச் சேகரிக்கப்பட்டது. வங்கிக் கணக்கு மூலம் ஊதியம் வழங்குதல்,
பணித் தள மேற்பார்வையாளர்கள் நியமனம், நீதிபதிகள் ஆய்வு, துணை வட்டார
வளர்ச்சி அலுவலர்கள் மேற்பார்வையில் பணிகள் மேற்கொள்ளுதல் என படிப்படியாக
பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தத் திட்டத்தால் விவசாயப் பணிகளுக்கு கூலியாள்
பற்றாக்குறை ஏற்பட்டதால் விவசாயப் பணிகளுக்கும் இந்தத் திட்டத்தை
விரிவுப்படுத்த வேண்டும் என்று விவசாய சங்கங்கள் வலியுறுத்திவருகின்றன.
தற்போது விவசாயப் பணிகளுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு
வருகிறது.
முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால்
தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தை பாஜக அரசு நிறுத்திவிட முடிவு
செய்திருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன் எதிர்க்கட்சிகள் கூறிவந்தன.
ஆனால், இந்தத் திட்டத்துக்கு ஆண்டுதோறும் நிதிநிலை
அறிக்கையில் ஒதுக்கப்படுவது போல, இந்த ஆண்டும் மத்திய அரசு நிதி
ஒதுக்கியுள்ளது. எனவே, இந்தத் திட்டம் தொடர்ந்து செயல்படுவது உறுதி
செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தத் திட்டத்தில் 100 சதவீதம்
உண்மையான ஏழை, எளிய குடும்பத்தினரே பணி புரிவதை உறுதி செய்யும் வகையில்,
பணியாளர்கள் தொடர்ந்து வேலை பெற வேண்டுமானால் தங்களது வேலை அட்டையுடன்,
ஆதார் அடையாள அட்டையையும் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இணைக்க வேண்டும்
என்பது கட்டாயமாக்கப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தின் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குமார் கூறியதாவது:
நூறு நாள் வேலைத் திட்டப் பணியாளர்கள் குறித்த கணக்கெடுப்பு, ஆய்வுப் பணிகள் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகின்றன.
இதில், வெவ்வேறு பகுதிகளில் இரண்டு வேலை அட்டைகள்
வைத்திருப்பது, திருமணமாகி வேறு பகுதிக்குச் சென்ற பெண்கள், இறந்தவர்கள்,
இடம் பெயர்ந்தவர்களின் வேலை அட்டைகளை நீக்குவதற்கான பணிகளும் தற்போது
நடைபெற்று வருகின்றன என்றார்.








