மத்திய அரசு ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை போல மாநில அரசு ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பகுதி நேர காலத்தில் பணிபுரிந்த தொழிற்கல்வி ஆசிரியர்கள் உள்பட அனைவருக்கும் 50 சதவீதம் பணிக்காலத்தை ஓய்வு ஊதியத்திற்கு எடுத்து கொள்ள வேண்டும், ஆசிரியர் தகுதி தேர்வை நீக்க வேண்டும் என்பன உள்பட மொத்தம் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் (ஜேக்டோ) திருச்சி மாவட்ட கிளை சார்பில் திருச்சியில் கவன ஈர்ப்பு ஊர்வலம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஊர்வலம்
பள்ளி முன்பு இருந்து கலெக்டர் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்திற்கு தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் அந்தோணி அன்பரசு முன்னிலை வகித்தார். மாநில ஜேக்டோ உயர்மட்ட குழு உறுப்பினர் அண்ணாதுரை ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தியாகராஜன் கோரிக்கை குறித்து பேசினார்.
ஊர்வலத்தில் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் ராகவன், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் நீலகண்டன், தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின் நிர்வாகி பக்கிரிசாமி, தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில மகளிர் அணி அமைப்பாளர் மதனா எழிலரசன் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தையொட்டி கண்டோன்மெண்ட சரக போலீஸ் உதவி கமிஷனர் கணேசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.








