15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல்லில் ஆசிரியர்கள் பேரணி நடந்தது.
ஜேக்டோ அமைப்பினர் பேரணி தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் (ஜேக்டோ) திண்டுக்கல் மாவட்டம் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடந்தது. இதற்கு ஜேக்டோ மாவட்ட தொடர்பாளர்கள் சந்திரசேகரன், ஜான்பீட்டர், சலேத்ராஜா ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வின்சென்ட் பால்ராஜ், மகேந்திரன் ஆகியோர் பேரணியை தொடங்கி வைத்து பேசினார்கள்.
தமிழை முதன்மை பாடமாக... இந்த பேரணியில், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கும், தொகுப்பூதிய நியமனத்தில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கும் பணியில் சேர்ந்தது முதல் பணிவரன் முறை செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், தமிழ்பாடத்தை முதன்மை பணியாக மாற்ற வேண்டும், ஆசிரியர் தகுதி தேர்வை நீக்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த பேரணி நடந்தது.
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொடங்கிய இந்த பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே நிறைவடைந்தது.
போக்குவரத்து பாதிப்பு இதில், 1,500–க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டதால், ஒவ்வொரு சந்திப்பு சாலைகளிலும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. பேரணி முடிந்த பின்பு ஒட்டுமொத்தமாக வாகனங்கள் புறப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அனைத்து சாலைகளிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து, போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்தனர்.








