கடல் ஆராய்ச்சிக்கான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்–1டி என்ற செயற்கைகோளுடன்
பி.எஸ்.எல்.வி. சி–27 ராக்கெட் தொழில்நுட்ப பணிகள் காரணங்களாக விண்ணில்
ஏவுவது நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது வரும் 28–ந் தேதி விண்ணில்
ஏவப்படுகிறது.
பி.எஸ்.எல்.வி. சி–27 ராக்கெட்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் (இஸ்ரோ) கடல்சார் ஆராய்ச்சிக்காக 7
செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்தது. அதன்படி ஏற்கனவே 3
செயற்கைகோள்கள் அனுப்பப்பட்டுவிட்டன. இப்போது 4–வது செயற்கைகோளாக
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1–டி யை பி.எஸ்.எல்.வி. சி–27 ராக்கெட் மூலம்
விண்வெளிக்கு செலுத்த உள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில்
இருந்து இந்த ராக்கெட் கடந்த 9–ந் தேதி மாலை 6.35 மணிக்கு செலுத்தப்படுவதாக
இருந்தது. இதற்கான 59 மணி நேர ‘‘கவுண்ட்டவுன்’’ கடந்த 7–ந் தேதி காலை 7.35
மணிக்கு தொடங்கப்படுவதாக இருந்தது. இயற்கை சீற்றம், இயற்கை இடர்மேலாண்மை,
கடல்சார் கண்காணிப்பு ஆகியவற்றை கண்காணிப்பதற்காக அனுப்பப்பட இருந்த, இந்த
செயற்கைகோள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த ராக்கெட் ஏவும் திட்டத்தை கடந்த
4–ந் தேதி இஸ்ரோ தள்ளிவைத்தது. தற்போது வரும் 28–ந் தேதி (சனிக்கிழமை)
விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:–
28–ந் தேதி ஏவப்படுகிறது
ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ராக்கெட் ஏவுவதற்கான ஆயத்த
பணிகளில் ஈடுபட்டிருந்த போது, வெப்ப கவசம் மூடப்பட்ட பின்னர்,
செயற்கைகோளுடன் இணைந்த ஏவு வாகனத்தில் உள்ள ஒருங்கிணைந்த மின்சார
கருவிகளில் பழுது இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக தொழில்நுட்ப
கருவிகளை ஆய்வு செய்ய வேண்டியிருந்ததால் ராக்கெட் ஏவும் திட்டம்
தள்ளிவைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து தட்பவெப்ப நிலையை கவனித்து
அதன்விளைவை ராக்கெட்டை தொலைவிடத்துக்கு அனுப்ப பயன்படும் மின்கருவிகள்
ஆய்வு செய்யப்பட்டது. இந்த பணிகள் முழுவீச்சில் முடிவடைந்ததால் வரும் 28–ந்
தேதி மாலை 5.19 மணிக்கு ஏவப்படுகிறது. இதற்கான ‘கவுண்ட்டவுண்’ வரும் 26–ந்
தேதி மாலை தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினார்கள்.







