தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ள ஓலைச்சுவடிகளை உருப்படம் (ஸ்கேன்) செய்து கணினிமயமாக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.பணியைத் தொடங்கி வைத்த ஆட்சியரும், நூலக இயக்குநருமான (கூடுதல் பொறுப்பு) என். சுப்பையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்த நூலகத்தில் தமிழ், சம்ஸ்கிருதம், வங்காளம்,
மராட்டியம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் 75,000-க்கும் அதிகமான
நூல்களும், 49,000-க்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளும் உள்ளன. இவற்றைப்
பாதுகாப்பதற்காகத் தமிழக அரசு ரூ.7.50 லட்சம் ஒதுக்கீடு செய்தது.
இதைத் தொடர்ந்து, ஓலைச்சுவடிகள், காகிதச்சுவடிகளை வண்ண
உருப்படம் செய்து கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இந்த ஓலைச்சுவடிகளை இணையதளத்தில், இருந்த இடத்திலிருந்தே பார்க்கும்
வகையில் இப்பணி நடைபெறுகிறது.
இந்த அரிய பொக்கிஷங்களை உலக அளவில் கொண்டு செல்ல
வேண்டும் என்ற நோக்கில் இது செய்யப்படுகிறது. இணையதளத்தில் படிக்க
விரும்புபவர்கள் அனுமதி பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த இணையதளத்தை
யாரும் தவறுதலாகப் பயன்படுத்தாத விதமாகப் பாதுகாப்பான மென்பொருளால்
அமைக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக மேற்கொள்ளப்படும் இந்தப் பணி 3
மாதங்களில் நிறைவடையும். மேலும், தேவைப்பட்டால் மத்திய அரசின் நிதியுதவி
பெற்று பணி மேற்கொள்ளப்படும். தவிர, புரவலர் திட்டம் மூலம் இப்பணி
மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
நூலகத்தில் நூல்கள் எங்குள்ளன என்பதை அறியவும்,
புத்தகத் தேர்வு செய்யவும் தொடுதிரை கணினி வசதி விரைவில் செய்யப்படவுள்ளது.
இந்த நூலகத்தில் ரூ.3 கோடியில் ஒளி, ஒலி அரங்கம், நவீன நூலக அறை போன்ற
நவீன மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்றார் ஆட்சியர்.
விழாவில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)
சங்கரநாராயணன், நூலக ஆலோசனைக் குழு உறுப்பினர் சிவாஜி ராஜா போன்ஸ்லே,
நூலகர் சுதர்சனம், தமிழ் பண்டிதர் மணிமாறன் ஆகியோர் உடனிருந்தனர்.








