கோவா மாநில அரசு விடுமுறைப் பட்டியலில் காந்தி ஜெயந்தி தினம் இடம்பெறாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.ஆனால், அது தட்டச்சில் ஏற்பட்ட தவறு என்றும்,
வேண்டுமென்றே செய்யப்பட்டது அல்ல என்றும் மாநில முதல்வர் லஷ்மிகாந்த்
பார்சேகர் கூறினார்.பாஜக ஆட்சி நடைபெற்று வரும் கோவாவில், சனிக்கிழமை
வெளியிடப்பட்ட நிகழ் ஆண்டுக்கான விடுமுறை பட்டியலில் காந்தி பிறந்த தினமான
அக்டோபர் 2ஆம் தேதி இடம்பெறவில்லை. இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
"இது தேசத்துக்கு எதிரான நடவடிக்கை' என்று காங்கிரஸ்
கட்சி விமர்சித்தது. இதுபோன்ற முடிவு எடுக்க மாநில அரசுக்கு உரிமை இல்லை
என்றும், உடனடியாக பட்டியலை திருத்த வேண்டும் என்று அக்கட்சி
வலியுறுத்தியது.
கோவா மாநில சுயேச்சை எம்.எல்.ஏ.வான விஜய் சர்தேசாய்
கூறுகையில், "லண்டனில் மகாத்மா காந்தியின் சிலை திறக்கப்பட்ட அதே நாளில்,
நம் நாட்டில் பாஜக ஆளும் கோவாவில் விடுமுறைப் பட்டியலில் இருந்து அவரது
பிறந்த நாள் நீக்கப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. இதுதான் பாஜகவின்
நாகரீகமா? என்று கேள்வி எழுப்பினார்.
இந்த பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்ப போவதாக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. சாந்தாராம் நாயக் கூறினார்.
கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் இருந்தபோது, மாநில
அரசின் விடுமுறைப் பட்டியலில் இருந்து காந்தி ஜெயந்தி, புனித வெள்ளி
உள்ளிட்ட சில விடுமுறைகளை நீக்க முடிவு செய்யப்பட்டது.
ஆனால், பொதுமக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து அந்த முடிவு கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.








