ஊர்வலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இயங்கி வரும் 28 ஆசிரியர் இயக்கங்கள் ஒன்று சேர்ந்து தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டோ) என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளனர்.
இந்த அமைப்பின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூரில் நேற்று பட்டதாரி ஆசிரியர்களின் ஊர்வலம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின்போது, 6–வது ஊதியக்குழுவில் தமிழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மத்திய அரசில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகின்ற ஊதியம் போல் இணையாக வழங்க வேண்டும். மத்திய அரசின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வழங்கி உள்ள படிகள் போல், தமிழகத்தில் பணியாற்றம் ஆசிரியர்களுக்கு மாநில அரசு வழங்க வேண்டும்.
அகவிலைப்படி 100 சதவிதத்தை கடந்து விட்டதால், 50 சதவித அகவிலைப்படியை ஊதியத்துடன் இணைத்து வழங்கிட வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு தொடக்கப்பள்ளிகளை மூடும் நோக்கத்தை கைவிட்டு, அனைத்து பள்ளிகளும் செயல்பட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொடக்கப்பள்ளியிலிருந்து மேல்நிலை கல்வி வரை தாய்மொழிக்கல்வியை நடைமுறைபடுத்திட வேண்டும் என்பன உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஊர்வலம் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
வேலூர் சைதாப்பேட்டை முருகன் கோவில் அருகே தொடங்கிய ஊர்வலம் கலெக்டர் அலுவலகம் அருகே முடிவடைந்தது. அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் தாண்டவராயன் தலைமை தாங்கினார். துணை பொதுச்செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் சி.சேகர் வாழ்த்தி பேசினார்.
15 அம்ச கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை மாநில அரசும் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என்பது உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் கோஷமிட்டனர்.
முடிவில் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் பக்தவச்சலம் நன்றி கூறினார்.








